No products in the cart.
மே 03 – முதலாம் நாள்!
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:1).
மனிதனை தமது நித்திய நோக்கமாய்க்கண்ட நம் அன்பு தேவன் மனிதனுக்காகவே முதலாம் நாள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். வானம் என்று சொல்லப்படுவது வெறும் ஆகாயவிரிவு மாத்திரமல்ல, அது பரலோகத்தையும் அங்குள்ள வான சேனைகள் அனைத்தையும் குறிக்கிறது. மனிதனை உண்டாக்குவதற்கு முன்பாகவே மனிதனுக்கு பணிவிடை செய்வதற்காக வானத்திலுள்ள தேவதூதர்களையெல்லாம் அவர் சிருஷ்டித்தார்.
உலகத்தில் எவ்வளவு பெரிய விஞ்ஞானியானாலும் சரி, அவனால் ஒரு புதிய அணுவை உருவாக்கவே முடியாது. ஏற்கனவே தேவன் சிருஷ்டித்தவைகளைத்தான் அவன் புதிய பொருட்களாக மாற்றிக்கொண்டிருக்கிறான். சிருஷ்டிப்பின் வல்லமையை கர்த்தர் தேவதூதருக்கோ அல்லது மனிதனுக்கோ கொடுக்கவில்லை.
ஒரு அணுவை சிருஷ்டிக்க வேண்டுமென்றால், அதற்கு எத்தனையோ கோடி டன் எடையுள்ள எரிபொருட்கள், மின்சாரம் போன்றவை தேவைப்படக்கூடும். ஒரு அணுவைப் புதிதாக உண்டாக்கும்படி பணம் செலவழிக்கக்கூடிய ஒரு செல்வந்தனும் பூமியில் இல்லை. அவ்வளவு ஞானமுள்ள ஒரு விஞ்ஞானியும் இல்லை. நம் கர்த்தர் அவ்வளவு பெரியவர்.
வானாதி வானங்களையும், சூரிய சந்திரனையும், திரளான நட்சத்திரங்களையும் சிருஷ்டித்த அவர் எவ்வளவு வல்லமையும் மகிமையுமானவர்! காணப்படுகிறவைகளானாலும் காணப்படாதவைகளானாலும் அவை அனைத்துமே நம் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்டவைகளே. வேதம் சொல்லுகிறது, “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசா. 54:5).
வேதத்தின் முதல் வசனம் சிருஷ்டி கர்த்தரை நமக்கு அறிமுகம் செய்கிறது. “ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்பதே அந்த அறிமுகம். அந்த மகா மகத்துவமும் மகிமையும் வல்லமையும் உள்ள தேவன் உங்களது அருமைத் தகப்பனாய் இருக்கிறது உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அல்லவா! அந்த சிருஷ்டி கர்த்தரானவர் இன்றைக்கும் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் சிருஷ்டிக்க கிருபையுள்ளவராயிருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.
“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1). கர்த்தரைப்போல வல்லமையுள்ள தேவன் வேறு யார் உண்டு? அவரைப்போல மகிமையும் மகத்துவமும் உள்ள தேவன் வேறு யார் உண்டு? அவரைப்போல உங்களில் அன்பு செலுத்தி உங்களை நேசிக்கிறவர்கள் வேறு யார் உண்டு?
சிருஷ்டிப்புகள் யாவும் கர்த்தரைத் துதிக்கின்றன. நீங்களும் கர்த்தரைத் துதிப்பீர்களா? “வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்” (வெளி. 5:13).
நினைவிற்கு:- “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).