No products in the cart.
மே 03 சனிக்கிழமை 2025 பிள்ளைகளாகும் அதிகாரம்!
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா. 1:12).
வேதத்திலே, விசுவாசிகளுக்கு கர்த்தர் கொடுக்கும் அதிகாரங்கள் எவை? முதலாவதாக, பிசாசுகளைத் துரத்தும் அதிகாரமும், இரண்டாவதாக, பலவானைக் கட்டும் அதிகாரமும், மூன்றாவதாக கட்டுண்ட மக்களை விடுதலையாக்கும் அதிகாரமும், நான்காவதாக, நோய்களின்மேல் அதிகாரமும், ஐந்தாவதாக, இயற்கையின்மேல் அதிகாரமும், ஆறாவதாக, மரணத்தின்மேல் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வளவு அதிகாரங்களையும் நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், முதலாவதாக கர்த்தருடைய பிள்ளைகளாக மாற வேண்டும். எந்த ஒரு மனிதன் சிலுவையண்டை வந்து, “ஆண்டவரே நான் ஒரு பாவி, நீர் எனக்காக சிலுவையிலே இரத்தம் சிந்தி மரித்திருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய இரத்தத்தாலே என்னைக் கழுவி உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடுகிறானோ, அவனுக்கு அவருடைய பிள்ளையாகும் அதிகாரத்தைக் கர்த்தர் கொடுக்கிறார். கர்த்தரிடத்திலிருந்து அதிகாரங்களை ஒருவர் பெற்றுக்கொள்வதுடன், அவற்றை செயல்படுத்தவும்வேண்டும்.
ஒருநாள் ஒரு இராஜாவைப் பார்க்க அவரோடு இளம் வயதில் ஒன்றாய்ப் படித்த ஏழை மனுஷன் ஒருவன் வந்து, “இராஜாவே நான் வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு நல்ல வேலை தாரும்” என்று கெஞ்சினான்.
அவனுக்குப் போதிய படிப்பறிவில்லாததால், என்ன வேலை கொடுப்பது என்று இராஜாவுக்குத் தெரியவில்லை. எனினும், அவன் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தபடியால், கடற்கரைக்குப் போய் ஒருநாள் முழுவதும் வருகிற அலைகளை எண்ணி மந்திரியிடம் சொல்லிவிட்டு உன்னுடைய ஊதியத்தை வாங்கிக்கொள்” என்றார்.
உடனே அவனுக்கு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. கடல் அலைகளை எண்ண இராஜா தனக்கு அதிகாரம் கொடுத்ததை ஊரெங்கும் பறைசாற்றினான். மந்திரியிடம் சொல்லி கடற்கரையிலே தனக்கென்று ஒரு பெரிய மாளிகையைக் கட்டிக்கொண்டான். தனக்கு உதவி செய்வதற்கென நூறுபேரை வேலைக்கு அமர்த்தினான். அந்த கடற்கரைப்பகுதியில் படகுகளோ, கப்பல்களோ வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.
‘நான் கடல் அலைகளை சரியாக எண்ண வேண்டும் என்று இராஜா சொல்லியிருக்கிறார். அவர் என் நண்பர். எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்’ என்று மந்திரியிடம் சொல்லி இராஜாவின் பெயரையும், அவர் கொடுத்த அதிகாரத்தையும் நன்றாகப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டான்.
ஆனால், நாமோ நமது இராஜாதிராஜா கொடுத்திருக்கிற அதிகாரத்தையும், வரங்களையும், தாலந்துகளையும் பயன்படுத்தத் தவறியவர்களாய் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற முடியாதபடி தடுமாறுகிறோம்.
தேவபிள்ளைகளே, தேவன் நமக்குத் தந்த அதிகாரத்தை செயல்படுத்த முன்வருவோம். அவரது மகிமையை புறஜாதியாரையும் காணச்செய்வோம்.
நினைவிற்கு:- “நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (2 கொரி. 5:20).