No products in the cart.
மே 02 – ஆதியிலே தேவன்!
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி.1:1).
வேதம் முதன்முதலில் நம் ஆண்டவராகிய கர்த்தரை “தேவன்” என்ற பெயரில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த வார்த்தை எபிரெய மொழியில் “ஏலோகிம்” என்பதாகும். ஏலோகிம் என்ற பதத்திற்கு உன்னதமான, முடிவில்லாத, எங்கும் நிறைந்த, வல்லமையுள்ள தேவன் என்றும் அர்த்தங்கள் உண்டு.
“ஏலோகிம்” என்னும் பெயரில் ஒரு புதுமை காணப்படுகிறது. அதாவது அது பன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. எபிரெய ஆண்பால் பெயர்களுக்குச் சாதாரணமாய் பயன்படுத்துகிற பன்மை பின்னிணைப்பு விகுதி அந்தப் பெயருக்கு உண்டு. ஆனால் இந்த வசனம் பன்மையில் ஆரம்பித்து, ஒருமையில் முடிவடைவதைப் பாருங்கள்.
அதாவது ஆதி. 1:1ல், “ஆதியிலே தேவன் (ஏலோகிம்) (பன்மை) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஒருமை). இலக்கணரீதியாக இப்படி எழுதப்படுவது ஒரு ஆச்சரியமே.
பன்மைச் சொல்லை ஒருமையில் முடியவைத்ததற்கு ஒரு தெய்வீக நோக்கமுண்டு. அது திரியேக தேவனாக தன்னைக் கர்த்தர் வெளிப்படுத்துவதேயாகும். அன்புள்ள பிதாவும், கிருபையுள்ள குமாரனும், ஐக்கியப்படுத்தும் ஆவியானவரும் ஒன்றாய் இணைந்து ஒரே கர்த்தராய் விளங்குகிறார்கள்.
தண்ணீர் இறைக்கிற கயிற்றைக் கவனித்துப் பாருங்கள். மூன்று கயிறுகள் ஒன்றாகப் பின்னப்பட்டு ஒரே கயிறாகக் காட்சியளிக்கிறது. அதுதான் ஏலோகிம் எனப் பெயர்பெறும் “ஒன்றான மெய்த்தேவன்” (யோவா. 17:3). மலை ஒன்றுதான். ஆனால் பர்வதங்கள் மூன்று. நமக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராக நம் கண்களை ஏறெடுப்போமா!
பிதாவாகிய கர்த்தர் “உண்டாகக்கடவது” என்று வார்த்தையினால் சகலவற்றையும் சிருஷ்டித்தபோதிலும், அந்தச் சிருஷ்டிப்பின் வார்த்தையை நிறைவேற்ற ஆவியானவருடைய வல்லமை தேவையானதாக இருந்தது. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த வேளையில் வல்லமையோடு ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
பிதாவாகிய தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்ன உடனேயே பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிச்சத்தை உருவாக்கிற்று. கர்த்தர் பேசுகிறார். ஆவியானவர் அசைவாடி முன் சென்று உருவாக்குகிறார். இதுதான் சிருஷ்டிப்பிலே நடந்த காரியம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் சிருஷ்டிப்பிலே இருந்தார்கள். அந்த மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். அப். யோவான் எழுதுகிறார், “ஆதியிலே வார்த்தை இருந்தது, (வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கிறது). அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவா. 1:1-3).
தேவபிள்ளைகளே, பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் உங்களோடு இருக்கிறார்கள். இன்றைக்கும் அவர் உங்களுக்காக சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறார். சரீரத்திலே புதிய அவயவங்களை உருவாக்குகிறார். குறைவுபட்ட அவயவங்களை வளரச்செய்கிறார்.
நினைவிற்கு:- “நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” (அப். 2:22).