No products in the cart.
மார்ச் 29 – தற்பொழிவை நாடாது!
“அன்பு … தற்பொழிவை நாடாது” (1 கொரி. 13:5).
ஒரு சுயநலவாதி, எப்பொழுதும் தன் உரிமைக்காகப் போராடுகிறான். அன்புள்ளவனோ, தன் உரிமைகளையும் நேசத்திற்காக விட்டுக்கொடுத்து தியாகஞ்செய்கிறான். அன்பு ஒருபொழுதும் தற்பொழிவை நாடாது.
ஆபிரகாமை கர்த்தர் அழைத்தபோது, அவர் எல்லாவற்றையும் தியாகஞ்செய்து, தன் இனத்தையும், தன் தகப்பன்வீட்டையும் விடக்காரணம் கர்த்தர்மேல் அவருக்கிருந்த அன்பு மிக அதிகமாக இருந்ததுதான் (ஆதி. 12:1).
யோனத்தானின் வாழ்க்கையை தியானித்துப்பாருங்கள். தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிறகு அவனே இஸ்ரவேலின் இராஜாவாக வரவேண்டிய சூழ்நிலை இருந்தும் தாவீதின்மேலுள்ள அன்பினால் தன் வஸ்திரம், தன் பட்டணம், தன் வில், தன் கச்சை என அனைத்தையும் கொடுத்தார் (1 சாமு. 18:4). அந்த அன்பு தற்பொழிவை நாடாத தியாகமான அன்பு.
“நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் (1 கொரி. 10:32,33) என்று தன்னை முன்மாதிரியாக்கி அப். பவுல் எழுதுகிறார். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலி. 2:4,5).
நம்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசிப்பது எளிது. நம்மேல் அன்பு செலுத்தாதவர்களை நேசிப்பதுதான் கடினம். ஆனால் முழுக்க முழுக்க சத்துருக்களாயிருக்கிறவர்களை நேசிப்பதென்பது எப்படி? அதுதான் தெய்வீக சுபாவம். கர்த்தர் “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்” என்று வெறுமையாய் கட்டளையிட்டு நிறுத்தாமல், தன் வாழ்க்கையில் சத்துருக்களை நேசித்துக்காட்டினார்.
சிலுவையில் அறையப்பட்டபோது அவரது சத்துருக்கள் எவ்வளவாய் அவருக்கு விரோதமாய் எழுந்தார்கள்! எவ்வளவாய் அவரைப் பாடுபடுத்தி, அவமானத்திற்குள்ளாக்கினார்கள்! அவர் அவைகளையெல்லாம் பொறுமையாய் சகித்ததுமல்லாமல் அன்போடுகூட பிதாவை நோக்கி, ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்று மன்றாடினாரே. அதுதான் சத்துருக்களை சிநேகிக்கும் அன்பு.
வேதம் சொல்லுகிறது, “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோம. 12:20,21).
“உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடுகூட அதற்கு உதவிசெய்வாயாக” (யாத். 23:4,5). தேவபிள்ளைகளே, அன்பு தற்பொழிவை நாடாது.
நினைவிற்கு:- “உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்” (நீதி. 24:17,18).
