No products in the cart.
மார்ச் 29 – கர்த்தருடையவர்கள்!
“நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்” (உன். 6:3).
நாம் கர்த்தருடையவர்கள். கர்த்தர் நம்முடையவர். அவரை ஏற்றுக்கொள்ளும்போது அவர் நமக்காக இருக்கிறார். நம்மோடிருக்கிறார். நமக்குள்ளிருக்கிறார். இதுதான் அவரைப் பூரணமாய் அநுபவிப்பதாகும்.
அமெரிக்க தேசம் சுதந்திரம் பெற்று குடியரசானபோது, குடியரசு என்றால் என்ன என்பதைக்குறித்து அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் தெளிவுபடுத்தினார். ‘ஜனங்களால்’ ‘ஜனங்களுக்காக’, ‘ஜனங்களைக் கொண்டு’ ஆட்சி செய்வது குடியரசாகும் என்றார். அந்த மூன்று பகுதிகளையும் சற்று சிந்தித்துப்பாருங்கள். அதுபோலத்தான் கிறிஸ்தவ வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. கர்த்தர் நமக்காக இருக்கிறார். நம்மோடிருக்கிறார். நமக்குள்ளிருக்கிறார்.
முதலாவதாக, தேவன் நமக்காக இருக்கிறார். தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதமாயிருக்கிறவன் யார் (ரோம. 8:31) என்று வேதத்தில் வாசிக்கிறோம். பிதாவாகிய தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் நமக்காகவே இருக்கிறார். நமக்காக வழக்காடுகிறார். நமக்காக யுத்தம் செய்கிறார். நமக்காக யாவையும் செய்துமுடிக்கிறார்.
இரண்டாவதாக, தேவன் நம்மோடிருக்கிறார். அவர்தாம் இம்மானுவேலர். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்பது அர்த்தமாகும். அவர் ஒருநாளும் நம்மைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (யோசு. 1:5). குமாரனாகிய இயேசுகிறிஸ்து நம்மோடு வாக்குத்தத்தம் செய்து உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று வாக்களித்திருக்கிறார் (மத். 28:20).
மூன்றாவதாக, அவர் நமக்குள்ளிருக்கிறார். அவர்தான் பரிசுத்த ஆவியானவர். அவர் நம் சரீரத்தை ஆலயமாக்கி நமக்குள் வாசம்செய்கிறார். பரிசுத்த ஆவியானவரைக்குறித்து கர்த்தர் வாக்குத்தத்தம் சொல்லும்போது அவர் உங்களுக்குள்ளேயிருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் என்று சொன்னார் (யோவா. 14:17).
“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19).
பிதாவாகிய தேவன் பரமண்டத்திலே வாசம்பண்ணினாலும் அவர் நமக்காக இருக்கிறார். குமாரனாகிய இயேசு நம்மோடுகூட இருக்கிறார். பரிசுத்த ஆவியானவராகிய தேவன் நமக்குள் இருக்கிறார். ஆகவே நம் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் இயேசுகிறிஸ்து வரும்போது பரிசுத்தமாய் பாதுகாக்கப்படட்டும். நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர். நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறாரே.
தேவபிள்ளைகளே, பரிசுத்தமுள்ள தேவனை உரிமைபாராட்டி நான் அவருடையவன் என்றும், அவர் என்னுடையவர் என்றும் சொல்லுங்கள். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்றுமே அவருடையதாயிருக்கட்டும். உங்களுடைய எண்ணங்களும், சிந்தைகளும் அவரால் வழிநடத்தப்படுகிறதாயிருக்கட்டும். உங்கள் சொல்லும், செயலும் அவருக்குப் பிரியமானவையாய் காணப்படட்டும்.
நினைவிற்கு:- “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவா. 15:7).