No products in the cart.
மார்ச் 27 – இறுமாப்பாயிராது!
“அன்பு …. இறுமாப்பாயிராது ..” (1 கொரி. 13:4).
தன்னைப்பற்றித் தானே அதிகமாக நினைப்பதுதான் இறுமாப்பு ஏற்படக் காரணமாகும். “அறிவு இறுமாப்பை உண்டாக்கும்” (1 கொரி. 8:1). மாம்ச சிந்தை இறுமாப்பை உண்டாக்கும் (கொலோ. 2:19). “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்” (நீதி. 18:12) என்று வேதம் சொல்லுகிறது.
வில்லியம் கேரியின் இறுமாப்பற்ற, தெய்வீக அன்பின் சுபாவத்தை நினைக்கும்போதெல்லாம் என் உள்ளம் உருகுவதுண்டு. அவர் செருப்பு தைக்கும் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தாலும், முடிவில் தலைசிறந்த தேவ ஊழியராக, மிஷனெரியாக, தியாகியாக, தெய்வீக அன்பு நிறைந்தவராக விளங்கினார்.
கர்த்தர்மேல் அளவற்ற அன்புவைத்த அவர் இந்திய மொழிகளைக் கற்று முப்பத்தினான்கு மொழிகளில் வேதபகுதிகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். அவருடைய மொழிப்பாண்டியத்துவமும், அறிவு ஞானமும், விடாமுயற்சியும் மிகப்பெரியது.
வில்லியம் கேரி புகழ்பெற்றவராய், பல பல்கலைக்கழகங்களை நிறுவினபோது, ஒருவன் அவரை இழிவுபடுத்த விரும்பி, எல்லோரும் ஒன்றாய் விருந்துண்டுகொண்டிருக்கும்போது, ‘வில்லியம் கேரி, நீங்கள் முன்பு செருப்பு தயாரிப்பவராயிருந்தவர்தானே’ என்று கிண்டலாக்க கேட்டான்.
அதைக்கேட்ட வில்லியம்கேரி எழுந்து, மிகவும் தாழ்மையுடன் “ஐயா, நீங்கள் என்னை அன்புடன் செருப்பு தயாரிப்பவன்தானே என்று சொன்னீர்கள். நான் தயாரிப்பாளன் இல்லை. கிழிந்த செருப்பை தைத்துக்கொடுக்கும் கூலியாள்தான்” என்றார். கர்த்தருக்காக எந்த இழிச்சொல்லையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அவரது தெய்வீக அன்பு என் இருதயத்தை உருக்குகிறது. ஆம், அன்பு இறுமாப்பாயிராது.
அதுபோல நாமும் இறுமாப்பாயில்லாமல் கண்ணீரோடு கர்த்தரண்டை திரும்புவதையே கர்த்தர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். அப்படி வரும்போது, உடனே நம்மை அணைத்துக்கொண்டு, நம் கண்ணீரைத் துடைத்து நம் பாவங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்து மறந்து நம்மீது அன்பு செலுத்துகிறார். ஆம், அவரது அன்பு எத்தனை இனிமையானது!
அன்று கெட்ட குமாரன் மனஸ்தாபத்தோடு தன் தகப்பனிடம் திரும்பி வரும்போது, அந்த அன்புள்ள தகப்பன் என்ன செய்தான் தெரியுமா? மகன் தூரத்தில் வரும்போதே அவனைக்கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்தான் (லூக். 15:20) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
மகன் மன்னிப்புக்கேட்கும்வரைகூட அன்பான தகப்பனால் பொறுத்திருக்கமுடியவில்லை. மனம்திரும்பும் மகன் அழும் காட்சியை மனதில் தியானித்துப்பாருங்கள். நீங்கள் கண்ணீரோடு கர்த்தரண்டை திரும்பும்போது அப்படித்தான் கர்த்தரும் உங்களைப் பாசத்தோடு ஏற்றுக்கொள்வார்.
தேவபிள்ளைகளே, நம் ஆண்டவர் அன்புள்ளவர் மட்டுமல்ல, நம் அன்புக்காக ஏங்குகிறவரும்கூட. நாம் அவரிடம் அன்பு செலுத்தாவிட்டால் அவர் யாரிடம் அன்புக்காகச் செல்லுவார்? நம்மை அன்போடு சிருஷ்டித்தார். எவ்வளவு அன்போடு நமக்காக ஜீவனைத் தந்தார்! அந்த அன்புக்கு இணையான அன்பும் உண்டோ?
நினைவிற்கு:- “நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” (1 கொரி. 8:1).
