Appam, Appam - Tamil

மார்ச் 26 – ஆத்துமா வாழ்கிறதுபோல

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோவா. 1:2).

அநேகர் நோய்கொண்ட சரீரத்திற்கும், ஆரோக்கியமுள்ள சரீரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் நோய்கொண்ட ஆத்துமாவுக்கும், ஆரோக்கியமுள்ள ஆத்துமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவதில்லை. ஆத்துமாவின் வாழ்வு என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இன்று அநேகர் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு” என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த ஆத்துமா வாழுகிறதா என்பதே தெரிவதில்லை. அந்த ஆத்துமா நோய்கொண்டு ஒடுங்கிப்போய் இருக்கிறதா அல்லது அந்த ஆத்துமா மரணமடைந்திருக்கிறதா என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடிவதில்லை

ஆத்துமா வாழ்கிறதுபோல என்று சொல்லும்போது, ஆத்துமாவின் நிலைமைக்குத் தக்கதான சரீர வாழ்வும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். சில வேளையில் இப்படி வாழ்த்துவது சாபமாகவே மாறிவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால், சிலருக்குள் ஆத்துமா வியாதிப்பட்டிருக்கிறது. சிலருக்குள் ஆத்துமா செத்துக்கிடக்கிறது. ஆத்துமா வாழ்வதுபோல என்று சொல்லும்போது, அப்படிப்பட்டவர்களை சரீர வியாதிக்கும், உலகப்பிரகாரமான சாவுக்கும் உள்ளாக்கிவிடக்கூடும்.

ஆரோக்கியமுள்ள ஆத்துமாவிலே அன்பும் சந்தோஷமும் சமாதானமும் நிரம்பியிருக்கும். ஆத்துமாவில் கர்த்தரைத் துதிக்கும் துதி இருக்குமென்றால், சரீரத்திலே தேவ பிரசன்னம் நிரம்பி வழியும். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10). சரீரத்திற்கு பல மருந்துகளையும், ஊட்டச்சத்துக்களையும் மனுஷன் கண்டுபிடித்திருக்கிறான். ஆனால் ஆத்துமாவிற்கு என்ன கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது? ஞானி சொல்லுகிறார், “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22).

சாதாரணமாக, துக்கத்தை நெஞ்சிலே அடக்கி வைத்துக்கொள்ளக்கூடாது என்று உலகத்தார் சொல்லுவார்கள். தங்களுக்கு அருமையானவர்கள் மரித்துப்போனால் வாய்விட்டு அழுது துக்கத்தை வெளியிட்டுவிடவேண்டும். நான்குபேரிடம் தங்களுடைய இருதயத்தின் பாரங்களைப் பகிர்ந்து குறைத்துவிடவேண்டும். கர்த்தருடைய சமுகத்திலே விழுந்து ஆறுதலையும் தேறுதலையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்படியில்லாமல் உள்ளத்திற்குள்ளே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், நாளடைவில் அந்த துக்கம் வாழ்க்கையைத் தாக்குகிறது. சரீரத்திலே பலவிதமான நோய்களைக் கொண்டுவந்துவிடுகிறது.

யோபு சொல்லுகிறார், “நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது” (யோபு 3:25,26).

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆத்துமாவைவிட்டு பயத்தை அப்புறப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத். 10:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.