No products in the cart.
மார்ச் 25 – அன்புக்கு பொறாமை இல்லை!
“அன்புக்குப் பொறாமையில்லை” (1 கொரி. 13:4).
அன்புள்ளவர்களின் இருதயத்தில் பொறாமை தங்குவதில்லை. ஏனென்றால், அன்பு சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் சகித்து, சகலத்தையும் நம்பி, சகலத்தையும் விசுவாசிக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் பொறாமைக்கு இடம் ஏது? அன்புக்கு பொறாமையில்லை.
அன்புக்கு எதிர்மறையான பொறாமையோ ஒரு எலும்புருக்கியாகும் (நீதி. 14:30). லூசிபரின் இருதயத்தில் இருந்துதான் பொறாமை ஆரம்பமானது. தன்னை தேவனுக்கு ஒப்பாக உயர்த்தி, கர்த்தருக்கு சமமாக்கிக்கொண்டதினாலே அவன் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான். பொறாமையினால் வந்த வீழ்ச்சி எவ்வளவு பயங்கரமான வீழ்ச்சி என்பதை சிந்தித்துப்பாருங்கள். தேவபிள்ளைகள் ஒருபோதும் பொறாமைக்கு இடங்கொடுக்கவேகூடாது.
கர்த்தர் ஆபேலின் பலியை அங்கீகரித்தபோது காயீனுடைய உள்ளம் சந்தோஷப்படவில்லை. தன்னுடைய சொந்த தம்பிதானே, அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு உயரட்டும் என்று எண்ணவில்லை. அவனுக்கு தம்பிமேல் பொறாமைதான் ஏற்பட்டது. அந்த பொறாமை கொலைவெறியாய் மாறிவிட்டது. தன்னுடைய சொந்த சகோதரன் என்றும் பாராமல் சகோதரனுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான் (ஆதி. 4:3-8) என்று வேதத்தில் பார்க்கிறோம்.
இன்றைக்கும்கூட சகோதரர்கள்மத்தியிலே பொறாமையும் எரிச்சலுமான காயீனின் ஆவி கிரியைசெய்கிறது. சகோதரனுடைய முன்னேற்றத்தைப் பார்க்கும்போது நாம் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் ஸ்தோத்திரம்பண்ணி மகிழ்பவர்களாக இருக்கவேண்டும். அவர்களில் குறைகாணும்போது அதை பகிரங்கப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்துவதைத் தவிர்த்து, ஜெபத்தோடுகூட அவர்களை மன்னித்து அந்த குறை நீங்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
பாருங்கள்! யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டார்கள். அந்த பொறாமையினால் அவனைக் குழியிலே தூக்கிப்போட்டார்கள். கொலைசெய்யவும் முயற்சித்தார்கள். இறுதியில் மீதியானியரின் கைகளில் அவனை விற்றுப்போட்டார்கள். முடிவு என்னவாயிற்று?
எந்த யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின்மேல் பொறாமைகொண்டார்களோ, அவர்களே யோசேப்பைப் பணிந்துகொள்ளும்படியான சூழ்நிலையை கர்த்தர் கொண்டுவந்தார். அவனுடைய சகோதரர்கள் தரைமட்டும் தாழ்ந்து அவனுடைய பாதங்களை வணங்கினார்கள். உங்கள்மேல் பொறாமைப்படுகிறவர்கள் உங்கள்முன் தாழ்ந்துபோவது உறுதி.
தானியேலின்மேல் பொறாமைப்பட்ட பாபிலோனின் பிரதானிகள் தானியேலைப்பற்றி இராஜாவிடம் அவதூறாய் கோள்மூட்டினார்கள். முடிவிலே என்ன நடந்தது? தானியேல் சிங்கக்கெபியிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டார். ஆனால் குற்றஞ்சாட்டினவர்களோ சிங்கக்கெபியில் தூக்கிப்போடப்பட்டார்கள்.
எந்த ஒரு மனுஷன் தன்னுடைய உள்ளத்தில் தெய்வீக அன்பால் நிரப்பப்பட ஒப்புக்கொடுக்கிறானோ, அவனுடைய உள்ளத்தில் பொறாமை எளிதாய் நுழைந்துவிடுவதில்லை. ஆகவே தேவபிள்ளைகளே, கல்வாரி அன்பினால் நிரப்பப்பட உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- “சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:2,3).
