No products in the cart.
மார்ச் 23 – நான் ஒன்றுமில்லை!
“நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரசகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும் …. அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:2).
தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு அருமையான வரம்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு இன்றும் தன் தீர்க்கதரிசனங்களின்மூலமாக இனிமையான செய்திகளை நமக்குத் தருவது ஒரு அருமையான காரியமல்லவா? அவை எவ்வளவாய் நம்மை ஆறுதல்படுத்தி உற்சாகப்படுத்துகின்றன.
அன்பால் நிறையப்பெற்ற ஊழியர்கள் தீர்க்கதரிசனமாக சில காரியங்களை உரிமையோடு கடிந்து உரைக்கும்போது, அதைக் கேட்பவர்கள் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியவும் செய்வார்கள். ஆனால் அன்பில் குறைபாடுள்ள ஊழியர்கள் அவ்வாறு செய்யும்போது கேட்பவர்கள் மனமடிவடைந்துவிடுகிறார்கள். அன்பற்ற அப்படிப்பட்டவர்களின் ஊழியத்தால் எந்த பிரயோஜனமும் இருப்பதில்லை.
அதுபோலவே ஒருவருக்கு அறிவின் வரங்கள் இருக்கலாம். மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத வேத இரகசியங்களை தெரிந்துகொள்ளும் திறனுமிருக்கலாம். பெரிய வேதபண்டிதராக இரண்டாம் வருகையைக்குறித்தும், வரப்போகும் காரியங்களைக்குறித்தும் திட்டமும் தெளிவுமாய் படம் வரைந்து விளக்கவும் முடியலாம். ஆனால் அவரிடம் அன்பில்லாவிட்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தேவ சமுகத்தில் நிற்கும்போது ஒருவர் எப்படிப்பட்டவர் எவ்வளவு படித்தவர், என்பதெல்லாம் முக்கியமல்ல. அவர் தெய்வீக அன்போடு செயல்பட்டாரா இல்லையா என்பதுதான் முக்கியம். ஒருவரிடம் எவ்வளவு வரங்கள் இருந்தாலும், அவரிடம் அன்பு இல்லாவிட்டால் ஒரு பிரயோஜனமுமில்லை.
உதாரணமாக ஒரு கைபேசியைப் பாருங்கள். அது ஒரு சாதாரணக் கருவியாயிருந்தாலும் வெளிதேசங்களிலிருந்து அதன்மூலமாய் பிள்ளைகளோடும், மனைவியோடும் பேசும்போது அவர்களுடைய அன்பின் குரல் நம்மைப் பரவசப்படுத்துகிறது. அந்த கைபேசி அன்பின் செய்தியையும், உள்ளத்தின் வாஞ்சையையும் வெளிப்படுத்துகிற ஒரு கருவியாய் இருந்தாலும் அதன் பேட்டரி சக்தியிழந்திருக்கும்போது அதனால் ஒரு பிரயோஜனமும் இருப்பதில்லை.
இதைப்போலத்தான் கர்த்தர் தீர்க்கதரிசிகளின்மூலமாக கைபேசியில் பேசுவதைப்போல பேசுகிறார். தீர்க்கதரிசி என்பவர் தேவனுடைய வாயாய் இருக்கிறார். அவர் வருங்காலத்தை முன் அறிவிக்கிறார். விசுவாசிகளின்மத்தியில் பக்திவிருத்தி உண்டாக்குகிறார். தேவனுடைய இரகசியங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அறிவிக்கிறார். இருந்தாலும், அந்த தீர்க்கதரிசியினிடத்தில் அன்பு இல்லாமல் போகுமென்றால் அனைத்தும் வீணாகிவிடுகிறது. அவர் பெற்ற வரங்களால் அவருக்கும் பிரயோஜனமில்லை, மற்றவர்களுக்கும் பிரயோஜனமில்லை.
தேவபிள்ளைகளே, தேவனுடைய செய்திகளை மனுக்குலத்திற்கு கொண்டுவருகிற தீர்க்கதரிசன வரத்தையுடையவர்கள் அன்புள்ளவர்களாய் இருக்கவேண்டும், தேவனுடைய கல்வாரி அன்பினால் நிறைந்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவேண்டும்.
நினைவிற்கு:- “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன்; நான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவா. 4:20).
