No products in the cart.
மார்ச் 22 – யுத்தம் கர்த்தருடையது!
“கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது” (1 சாமு. 17:47).
“யுத்தம் கர்த்தருடையது” என்று ஒப்புக்கொடுப்பதே வெற்றியின் மற்றொரு இரகசியமாகும். தாவீது செய்த எல்லா யுத்தங்களையும், தான் செய்வதாக அவர் எண்ணவில்லை. “யுத்தம் கர்த்தருடையது; தோல்வி எதிரியினுடையது. ஜெயமோ தன்னுடையது” என்பதே அவருடைய விசுவாச அறிக்கை.
உங்களுக்கு விரோதமாய் எந்த மந்திரவாதமோ, தீய மனிதரோ எழும்பினாலும், கர்த்தரை அந்த பிரச்சனைகளுக்கு முன்பாக நிறுத்திவிடுங்கள். உங்களுக்கு சாதகமாகப் போரிட அவர் தயாராக நிற்பதை உங்கள் விசுவாசக் கண்களால் பாருங்கள்.
வானம் அவருக்கு சிங்காசனம்; பூமி அவருக்குப் பாதபடி. எவ்வளவு பெரிய பார்வோனாலும் சரி, எரிகோவின் உயர்ந்த மதில்களானாலும் சரி, அவருக்கு எதிர்நிற்கமுடியாது. அவருக்கு ஒப்பானவர் யார்? தாவீது சொன்னார்: “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:11). கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங். 138:8). ஆம், தேவபிள்ளைகளே, யுத்தம் கர்த்தருடையது.
சிலர் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் தங்கள் தலையின்மேலேயே போட்டுக்கொண்டு, தங்கள் சுயபெலத்தாலும், சுயஞானத்தாலும், மேற்கொள்ள முற்பட்டு மாம்சத்திலே போராடிக்கொண்டிருப்பார்கள். உலகப்பிரகாரமான போலீஸ் அதிகாரிகளையும், வக்கீல்களையும் நம்பிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் முடிவிலே மனவியாகுலத்தையும், தோல்வியையுமே அடைவார்கள். வேதம் சொல்லுகிறது, “மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:13,14).
மோசே ஒரு காலத்தில், யுத்தத்தைத் தன்னுடையதாய் எண்ணி, ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று மணலிலே புதைத்தார். இது பார்வோனுக்கு தெரிந்துவிடுமோ என்று பயந்து, எகிப்தைவிட்டே ஓடிப்போனார். ஆனால், மோசே, கர்த்தரே யுத்தம்செய்யும்படி அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தபோது, கர்த்தர் முழு எகிப்தின் சேனைகளையும், இரதங்களையும், குதிரைவீரர்களையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப்போட்டார்.
யோசபாத்தின் வெற்றியின் இரகசியம் என்ன? பயங்கரமான படைபலத்தோடு எதிரி யுத்தம் செய்ய வந்தபோது, அவர்களைக் கர்த்தருடைய கரத்திலே ஒப்புக்கொடுத்துவிட்டு, கர்த்தரைப் போற்றிப்பாட பாடகர் குழுவினரை ஏற்படுத்தினார். அவர்கள் கர்த்தரைப் பாடித் துதித்தபோது, எதிரிகள் தங்களுக்குள்ளே வெட்டுண்டு மடிந்தார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும்படி, கர்த்தரிடத்திலே உங்கள் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் ஒப்புக்கொடுத்துவிடுங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்” (1 நாளா. 29:11).