No products in the cart.
மார்ச் 20 – தெய்வீக அன்பைக் கொண்டுவாருங்கள்!
“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1 யோவா. 4:18).
பயத்தை மேற்கொள்ளும் தேவனுடைய வல்லமை அன்பாகும். ஆகவே பயப்படும் நேரத்தில் தெய்வீக அன்பை உங்கள்முன் கொண்டுவாருங்கள். “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 @யாவா. 4:16).
வேதம் சொல்லுகிறது, “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது; பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1 யோவா. 4:18,19).
ஒருவர், ஒரு ஓய்வுநாள் பள்ளிக்கூடத்தில் சிறுவர் சிறுமியரிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் ஒரு அறையிலே தனிமையாய் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென்று சாத்தான் வந்து கதவைத் தட்டுகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். சில சிறுமியர் நாங்கள் பயந்து கட்டிலின்கீழாய் ஒளிந்துகொள்வோம் என்று சொன்னார்கள். சிலர் கதவைத் திறக்கவேமாட்டோம் என்று சொன்னார்கள். சிலர் அப்பாலே போ சாத்தானே என்று அவனை விரட்டுவோம் என்றார்கள். அப்பொழுது ஒரு சிறுமி கணீரென்று சாத்தான் கதவைத் தட்டினால் இயேசப்பாவைக் கதவைத் திறக்கச்சொல்வேன். சாத்தான் ஓடியே போய்விடுவான் என்றாள். எத்தனை அருமையான ஒரு பதில்!
இயேசுவை நேசிக்கிறவர்கள் தேவஅன்பினால் நிரம்பியிருப்பதால் பயம் அவர்களை மேற்கொள்வதில்லை. ஆகவே தேவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:5).
கர்த்தருடைய பிரசன்னமும் சமுகமும் உங்களோடு இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தருடைய பிரசன்னத்திலே கர்த்தர் கூடவே நிற்கிறார் என்ற பெரிய தைரியமும் உற்சாகமும் உள்ளத்தை நிரப்பும். கர்த்தருடைய பிரசன்னம் சூழ்ந்துகொள்ளும்போது ஆயிரம் பதினாயிரம் தேவதூதர்கள் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணருவீர்கள்.
கர்த்தருடைய பிரசன்னத்தை உணரும்போது முழு பரலோகமும் உங்களுக்குப்பின் நிற்கிறது என்பதை அறிந்துகொள்வீர்கள். ஒரு உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு சாதாரண காவலர் முயற்சிகளை மேற்கொள்ளும்போது அத்தனை காவலர் படையும் தன் பின்னே நிற்பதுபோல அவன் உணருவான். அவனிடம் பயமிருக்காது.
“என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார் (யாத். 33:14). “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5). “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறாரே (மத். 28:20). தேவபிள்ளைகளே, தேவபிரசன்னத்தையும், தேவ சமுகத்தையும் எப்பொழுதும் உணருங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே” (எபி. 13:6).
