No products in the cart.
மார்ச் 19 – அன்பிலே நிலைத்திருங்கள்!
“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவா. 15:10).
ஆவியின் கனிகளிலே சிறந்த கனி அன்பு என்கிற கனியாகும். ஆவியின் கனியோ அன்பு என்றுதான் கனிகளின் பட்டியல் துவங்குகிறது (கலா. 5:22). இந்தத் தூய்மையான அன்பை இயேசுகிறிஸ்துவிலே நீங்கள் காணலாம். அவர் தன்னையே சிலுவையில் அர்ப்பணித்து இவ்வளவாய் உலகத்திலே அன்புகூர்ந்தார் (யோவா. 3:16). ஆகவே, இந்த தெய்வீக அன்பிலே நிலைத்திருங்கள்.
இயேசுகிறிஸ்துவுடைய அன்பு தியாகமான அன்பாகும். அது தம்மண்டை வருகிற ஒருவரையும் தள்ளாத அன்பு. உங்களைத் தேடி ஓடி வந்த அன்பு. உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்த அன்பு. உங்களை முடிவுபரியந்தம் நேசிக்கும் அன்பு. வேதம் சொல்லுகிறது, “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:5).
அன்பு இல்லாவிட்டால் ஆவியின் வரங்களினால் பிரயோஜனமில்லை. அப். பவுல் சொல்லுகிறார், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:1,2). ஆகவே, அன்பிலே நிலைத்திருங்கள்.
அன்பில்லாத ஊழியம் மாய்மாலமான ஊழியம். அன்பில்லாத உள்ளம் வெறுமையான உள்ளம். கடைசி நாட்களில் “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” (மத். 24:12). உங்கள் அன்பு தணிந்துபோகாமல், குறைந்துபோகாமல் எப்பொழுதும் அந்த தெய்வீக அன்பை அனல்மூட்டி எழுப்புங்கள்.
“நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்” (உன். 8:6,7).
அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் இயேசுதான். அவரிலேதான் பூரண அன்பைக் காணமுடியும். வேதம் சொல்லுகிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம. 5:8).
இயேசுகிறிஸ்துவினுடைய பார்வை, வார்த்தைகள், செயல்கள், உபதேசங்கள் என அனைத்திலுமே அன்பைக் காண்கிறோம். கல்வாரிச்சிலுவையிலே அவரிடம் இருந்து வெளிப்பட்ட அன்பின் பெருவெள்ளம் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளுகிறது. தேவபிள்ளைகளே, அன்பிலே நிலைத்திருங்கள்.
நினைவிற்கு:- “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவா. 4:9).
