No products in the cart.
மார்ச் 17 – மரணத்திலிருந்து ஜெயம்!
“பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்” (1 கொரி. 15:26).
சாத்தானின் கூலிப்படையிலே அசுத்த ஆவிகள், வான மண்டலத்தினுடைய பொல்லாத ஆவியின் சேனைகள், துரைத்தனங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றுடன் மரணமும், பாதாளமும்கூட இடம் பெறுகின்றன. ஆதிமனிதன் பாவம் செய்ததின் விளைவாக மரணம் மனுக்குலத்தை ஆட்கொண்டது.
ஆனால் இயேசுகிறிஸ்து எப்பொழுதும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து, தேவசித்தம் செய்தபடியினால், மரணத்தை ஜெயித்தார். மரணத்தின் அதிபதியான பிசாசை ஜெயித்தார். மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (ஏசா. 25:8).
அவர் மரித்துப்போன யவீருவின் மகளை உயிரோடு எழுப்பினார். மரித்து பாடையில் ஏற்றப்பட்ட நாயீனூர் விதவையின் மகனை ‘வாலிபனே, எழுந்திரு’ என்று சொல்லி அவனுக்குப் புது ஜீவனைக் கட்டளையிட்டார். மரித்து நான்கு நாட்களாகி நாறுகின்ற நிலைமையிலிருந்த லாசருவையும் உயிரோடு எழுப்பினார்.
இயேசுகிறிஸ்து மரண பயத்தை ஜெயித்தார். ‘ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுவித்தார்’ (எபி. 2:15). தன்னுடைய கல்வாரி மரணத்தினாலே மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை அழிக்கும்படிக்குத் தீர்மானித்தார் (எபி. 2:14). மரணத்திற்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார் (வெளி. 1:18).
கிறிஸ்துவினுடைய வருகையின்போது, பிரேதகுழியிலுள்ள எண்ணற்ற பக்தர்கள் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு உயிரோடு எழுந்திருப்பார்கள். உலர்ந்த எலும்புகள் உயிரடைந்து மாபெரும் சேனையாக நிற்கும்.
உங்களுடைய ஆத்துமாவிலே எந்த விதத்திலும் மரணம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்துவாகிய ஜீவன் உங்களுக்குள்ளே இருக்கட்டும். “கிறிஸ்து எனக்கு ஜீவன்” (பிலி. 1:21) என்று அறிக்கையிடுவீர்களானால், சாவு உங்களுக்கு ஆதாயமாய் மாறிவிடும். மரணம் வருவதற்கான எல்லா வழிகளையும் வாசல்களையும் அடைத்துவிடுங்கள்.
ஜனங்கள் பாவத்தின் மூலமாகவே மரணத்துக்கு வாசல்களைத் திறக்கிறார்கள். பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக். 18:20). “மாம்சசிந்தை மரணம்” (ரோம. 8:6). இந்த மாம்ச சிந்தையைப் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே மேற்கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களாகிய ஏனோக்கும், எலியாவும் தேவனோடு நடந்து, அவரோடு சஞ்சரித்து, மரணத்தைக் காணாமல் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் அல்லவா? அப்படியே நீங்கள் இந்த கடைசி காலத்தில் கர்த்தர்மேல் அன்புகூர்ந்து, அவருடைய கரம்பிடித்து நடவுங்கள். அவரை நேசிக்கிறதினால், அவருடைய பிரசன்னம் எப்போதும் உங்களோடு இருக்கும்.
தேவபிள்ளைகளே, அவர் உங்களை விட்டு விலகமாட்டேன் என்றும், கைவிடமாட்டேன் என்றும் வாக்குப் பண்ணியிருக்கிறபடியால், மரணம் உங்களை நெருங்கக்கூட முடியாது. கர்த்தரோடு நடக்கிற பரிசுத்தவான்கள், மரணத்தைக் காணாமல் கர்த்தருடைய வருகையிலே மறுரூபமாகி எடுத்துக்கொள்ளப்படுவார்கள். “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாப்பிரமாணம்; நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:55-57).
நினைவிற்கு:- “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை… நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுகிறோம்” (1 கொரி. 15:51).