No products in the cart.
மார்ச் 15 – அன்பாகவே இருக்கிறார்!
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8).
கர்த்தருடைய அன்பை இந்த காலை வேளையிலே தியானிப்பது நம்முடைய இருதயத்தை களிப்பாக்கும். ஆம், அவரைப்போல நம்மை நேசிக்கிறவர்கள் ஒருவரும் இல்லை. அவரைப்போல அன்பும், மனதுருக்கமும் உள்ளவர்கள் வேறு ஒருவரும் இல்லை. நாம் அவரிடத்தில் அன்புகூருவதற்கு முன்பாகவே அவர் நம்மேல் அன்புகூர்ந்துவிட்டார். இது எத்தனை ஆச்சரியமானது!
அன்பாக இருக்கிறார் என்பதற்கும், அன்பாகவே இருக்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அன்பாகவே இருக்கிறார் என்று நாம் சொல்லும்போது தொடர்ச்சியாக எந்த மாறுதலும் இல்லாமல் நிரந்தரமாக அன்பாக இருந்துகொண்டேயிருக்கும் நிலையைக் காண்பிக்கிறது. கர்த்தர் வழியாய் இருக்கிறார், ஒளியாய் இருக்கிறார், ஆவியாய் இருக்கிறார் என்றெல்லாம் வேதத்தில் நாம் வாசிக்கிறோம். ஆனால், இந்த ஒரு இடத்தில் மட்டும், அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. ஆம், அந்த அன்பு கலப்படமற்ற அன்பு. நூற்றுக்கு நூறு உண்மையானதும், தூய்மையானதுமான அன்பு.
ஒருமுறை ஒருவர் அவர் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார். அவர் வளர்த்த நாயோ அவருக்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடுகிறது என்பதை உணர்ந்து, அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து ஓடி வந்துகொண்டேயிருந்தது. அவர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்களும் ஒன்றும் புசியாமல், குடியாமல் அங்கேயே படுத்துக்கிடந்தது. காவலர்கள் அதை விரட்டிப் பார்த்தார்கள். அதுவோ அசராமல் அங்கேயே இருந்தது.
மூன்றாம் நாள் அவர் பிணை பெற்று வெளியே வந்தபோது, அந்த நாய் எலும்பும் தோலுமாய் இருந்தபோதிலும் தன் எஜமான்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தும்படி வாலை ஆட்டிக்கொண்டு அருகிலே ஓடி வந்து அவரை நக்கிக்கொடுத்தது. அவருடைய உள்ளம் உடைந்தது. நான் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது எந்த உறவினர்களும் என்னைப் பார்க்க வரவில்லை. அன்பு பாராட்டவில்லை. ஆனால், இந்த அன்பான மிருகமோ என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறது என்று சொல்லி அதைத் தூக்கி மார்போடு அணைத்துக் கண்ணீர் சிந்தினார். நாய் ஒரு சாதாரண பிராணியாயினும், அதன் உள்ளத்திலே கர்த்தர் எவ்வளவு அதிகமான அன்பை வைத்திருக்கிறார்!
மனிதனுடைய அன்பு மாறிப்போய் விடலாம். இனத்தவர்கள், உறவினர்கள் அன்பும் மாறலாம். ஆனால், தேவனோ அன்பாகவே இருக்கிறார். அந்த அன்பினால்தான் அவர் நமக்கு வாக்குக் கொடுத்து, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிறார் (யோசு. 1:5). அந்த அன்போடு தம்முடைய கரத்தை உங்களுக்கு நேராக நீட்டுகிறார்.
“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறார்” (ஏசா. 41:13). தேவபிள்ளைகளே, அந்த அன்புள்ள தேவனிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூர தீர்மானம் செய்யுங்கள். அவர் எப்பொழுதும் அன்பாகவே இருக்கிறார். இன்றைக்கும் உங்கள்நிமித்தம் அவரது உள்ளம் பொங்குகிறது.
நினைவிற்கு:- “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (யாத். 20:6).
