No products in the cart.
மார்ச் 14 – ஒருவரிலொருவர்!
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 13:34).
ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்ற கிறிஸ்துவின் அன்புக்கட்டளை மீண்டும் மீண்டுமாக பன்னிரெண்டுமுறை புதிய ஏற்பாட்டிலே இடம்பெறுகிறது. எந்த ஒரு அன்புள்ள தகப்பனும் தன்னுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஐக்கியமாகவும், சமாதானமாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பானல்லவா?
“நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12). “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (யோவா. 15:17). “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்துகொள்ளுவார்கள்” (யோவா. 13:35) என்றெல்லாம் இயேசுகிறிஸ்து எவ்வளவு தெளிவாக அன்பைப்பற்றி கூறியிருக்கிறார்!
அன்பின் மார்க்கம் என்று அழைக்கப்படுகிற கிறிஸ்தவ மார்க்கம் இன்றைக்கு பிரிவினைகளால் நிரம்பிவிட்டது. சபைக்கு சபை பிரிவினை. ஊழியருக்கு ஊழியர் பிரிவினை. பல ஆலயங்களிலே நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் சபை மூப்பர்களும், ஊழியர்களும் அலைந்துகொண்டிருப்பது எத்தனை பரிதாபமான காரியம்! தெய்வீக அன்பை இழந்து சுயநலவாதிகளாக ஜனங்கள் மாறிவிட்டதே இதற்குக் காரணம். “ஆண்டவரே, எங்கள் அன்புத் தாழ்ச்சியை மன்னியும்; தெய்வீக அன்பை எங்கள் இருதயத்தில் ஊற்றும்” என்று நாம் மன்றாட கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்னும், தவறான உபதேசங்களால் சபைகளில் பிரிவினைகள் அதிகமாகியுள்ளன. பெருமையான போக்கும், ஆடம்பரப் பிரியமும் சபையை பல குழுக்களாகப் பிரித்துள்ளது. அன்புள்ள தேவன் இதையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொண்டிருக்கிறார்.
நாம் கர்த்தருடைய சீஷர்கள். அவருடைய விசுவாசிகள். அவர் எப்படி அன்புடன் இருந்தாரோ, அப்படி நாமும் இருக்கும்படியாக அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்துவினுடைய சுபாவங்கள் குணாதிசயங்கள் நமக்குள் வரவேண்டாமா? கிறிஸ்துவினுடைய அன்பும், மனதுருக்கமும், காருண்யமும் நம்மிலே காணப்படவேண்டாமா?
நாம் ஆவியானவரின் பரிபூரண ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்து கிறிஸ்துவினுடைய அன்பையும், மனதுருக்கத்தையும், அவருடைய மற்ற குணாதிசயங்களையும் நமக்குள் கொண்டுவருவோமாக! கிறிஸ்துவினுடைய சுபாவங்கள் பூரணமாய் நம்மிலே உருவாக ஒப்புக்கொடுப்போமாக! அப்பொழுதுதான் மற்றவர்களையும் கிறிஸ்துவின் அன்பின் பூரணத்துக்குள் வழிநடத்த முடியும்.
பெலனுள்ள சபை, பெலனற்ற சபை, பெரிய சபை, சிறிய சபை, வருமானம் நிறைந்த சபை, வருமானம் குறைந்த சபை, பூரண சுவிசேஷ சபை, பாதி சுவிசேஷ சபை, மணவாட்டி சபை, ஆதரவற்றோர் சபை என்றெல்லாம் நாம் வேறுபிரித்து காண்பித்துக்கொண்டிராமல், நாமெல்லாருமே கிறிஸ்துவினுடைய ஒரே இரத்தத்தாலே மீட்கப்பட்டவர்கள், ஒரே ஆவியினாலே தாகம் தீர்க்கப்பட்டவர்கள், ஒரே பிதா நமக்கு உண்டு என்று உணர்ந்து, கர்த்தருடைய குடும்பமாக ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்லுவோமாக.
நினைவிற்கு:- “தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்” (2 பேது. 1:7).
