Appam, Appam - Tamil

மார்ச் 11 – துன்பப்படுகிறவர்கள்!

“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:10).

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பாடுகள் நிறைந்த ஒரு பாக்கியமான வாழ்க்கை ஆகும். அதே நேரம், இது நம்பிக்கையுள்ள வாழ்க்கையும்கூட! இந்த பூமியில் கிறிஸ்துவினிமித்தம் பாடுகளை அனுபவிக்கும்போது, நித்தியத்திலே பாக்கியமான பரலோக இராஜ்யத்திற்குள் செல்லுகிறோம்!

கர்த்தர் இந்த உலகத்தில் நமக்கு வசதியான வாழ்க்கையை வாக்குப்பண்ணவில்லை. உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று இயேசு திட்டமும் தெளிவுமாய் கூறுகிறார் (யோவா. 16:33). எல்லாவித பாடுகளையும், வேதனைகளையும், உபத்திரவங்களையும் தாங்குவதற்கு சீஷர்களை ஆயத்தப்படுத்தினார். வேதம் சொல்லுகிறது: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோ. 3:12).

“ஊழியம் செய்தேன் என்பதற்காக நாற்பது ஆண்டுகள் நான் சிறையில் கஷ்டப்பட்டேன். ஆனால், வெளியில் இருப்பதைவிட சிறைச்சாலையில் இருக்கும்போது, கர்த்தருடைய சமுகமும் பிரசன்னமும் மிக அதிகமாய் அருகில் இருப்பதை உணர்ந்தேன். கர்த்தரோடுகூட பாக்கியமான முறையில் தொடர்ந்து பாடு அனுபவிப்பதையே விரும்புகிறேன்” என்று ஒரு ஊழியர் சொன்னார்.

மோசேயைக்குறித்து வேதத்தில் வாசித்துப் பாருங்கள். எபி 11-ம் அதிகாரத்தில் மோசே பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிக்கிறதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார். எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று அவர் எண்ணினார்.

கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, மற்றவர்கள் உங்களைப் பகைப்பார்களென்றால், கவலைப்படாதிருங்கள். கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள். பாடுகளிலே சந்தோஷப்பட்டு களிகூருங்கள். நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். பரலோக இராஜ்யத்திலும் உங்களுக்குப் பலன் மிகுதியாயிருக்கும்.

சீஷர்களின் பிற்கால வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்கள் கர்த்தருக்காக பாடு அநுபவிப்பதையே பாக்கியமாகக் கருதினார்கள். ஏனென்றால் கர்த்தருக்காக பாடு அநுபவிக்கிறவர்கள் அவரோடுகூட அரசாளுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகள் அல்ல என்பதையும் அவர்கள் திட்டமாய் அறிந்திருந்தார்கள்.

ஆகவேதான் பவுலும் சீலாவும் சவுக்கினால் அடிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்த தொழுமரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தபோதிலும், கர்த்தரைப் பாடித் துதித்தார்கள். எங்களுக்காக கல்வாரி சிலுவையில் பாடுபட்ட ஆண்டவருக்காக நாங்கள் பாடுகளை அநுபவிக்க பாக்கியம் கிடைத்ததே என்று மனம் மகிழ்ந்தார்கள். வேதம் சொல்லுகிறது, “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19).

தேவபிள்ளைகளே, உங்களுடைய பாக்கியத்தை ஒருமுறை நினைத்துப்பாருங்கள். கர்த்தருடைய வார்த்தைகள் ஒருநாளும் மாறுவதில்லை. நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டு மேன்மையுடையவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோம. 8:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.