Appam, Appam - Tamil

மார்ச் 10 – சமாதானம் பண்ணுகிறவர்கள்!

“சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத். 5:9).

சமாதானமாயிருப்பது என்பது வேறு. சமாதானத்தை நேசிப்பது என்பது வேறு. சமாதானம்பண்ணுவது என்பது வேறு. கர்த்தர் சமாதானம் பண்ணுகிறவர்களையே பாக்கியவான்கள் என்று அழைக்கிறார். சமாதானம்பண்ணுவதிலுள்ள ஆசீர்வாதத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

அநேகர் தாங்கள் சமாதானத்துடன் வாழ்ந்தால்போதும் என்று திருப்தியடைந்துவிடுகிறார்கள். ஆனால் கர்த்தர் உங்களை அடுத்த படிக்கு அழைத்துச்செல்ல பிரியப்படுகிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கடமையைக் கொடுக்க பிரியப்படுகிறார். சமாதானமில்லாத குடும்பங்களிலே நீங்கள் சமாதானத்தைக் கொண்டுவரவேண்டும். கணவனும் மனைவியும் சமாதானமில்லாமல் தவிக்கிறார்களா? அவர்களுக்காக நீங்கள் ஊக்கமாக ஜெபித்துவிட்டு, அவர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களை ஒப்புரவாக்கவேண்டும். அதுபோலவே குடும்பங்களுக்குள்ளே, சகோதரர்கள் மத்தியிலே, திருச்சபை உறுப்பினர்களுக்கிடையே பிரச்சனைகள் வரும்போது, அவர்களை இணைத்து ஒப்புரவாக்கி சமாதானம்பண்ணவேண்டும். ஏனென்றால், நம்முடைய தேவன் சமாதான பிரபுவாயிருக்கிறார். நம்முடைய உள்ளத்தில் சமாதானத்தைக் கொடுத்த ஆண்டவர், உடைந்து போயிருக்கிற உள்ளங்களையும் இணைத்து சமாதானத்தைக் கொண்டுவரவே பிரியப்படுகிறார்.

சமாதானம் என்றால் என்ன? எந்த பகையும் இல்லாதிருக்கிற நிலையே சமாதானமாகும். பகையானது முதன்முதலாக ஏதேன் தோட்டத்திலே பாவத்தின் விளைவாக தோன்றியது. அந்தப் பகையை சமாதானமாக்கவே இயேசு இந்த உலகத்தில் இறங்கி வந்தார். மனுஷனை பிதாவோடுகூட இணைப்பதற்காக தம்மையே சிலுவையில் அர்ப்பணித்தார். கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து பகையைச் சிலுவையினால் கொன்று, சமாதானத்தைக் கொண்டுவந்தார் (எபே. 2:14) என்று வேதம் சொல்லுகிறது.

சிலுவை இரண்டு குறுக்கு பலகைகளினாலானது. மேலிருந்து கீழ்நோக்கி இருக்கும் துண்டுப் பலகை பரலோக தேவனுக்கும், மனிதனுக்கும் ஏற்படும் சமாதானத்தைப் பிரதிபலிக்கிறது. பக்கவாட்டில் இடமிருந்து வலமாக அமைந்திருக்கும் பலகையானது மனிதர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டும் சமாதானத்தைப் பிரதிபலிக்கிறதாக இருக்கிறது. நாம் ஜனங்களை தேவனோடு சமாதானப்படுத்தவேண்டும். ஒருவருக்கொருவர் சமாதானப்படுத்தவேண்டும்.

வேதம் சொல்லுகிறது: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்” (1 கொரி. 14:33). ஆகவே சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடருவோமாக (1 பேது. 3:11). இந்த நாட்களில் குடும்பங்கள், வீடுகள், தேசங்கள், ஜாதிகள் ஆகியவற்றுக்கிடையே எவ்வளவு சமாதானமற்ற பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன என்பதை கவனித்துப்பாருங்கள். மனஸ்தாபம், வாக்குவாதம், வழக்குகள், வெறுப்புகள் ஆகிய இவைகளெல்லாம் சமுதாயத்தின் எல்லா இடங்களிலும் தாண்டவமாடுகின்றன.

இவைகளையெல்லாம் மாற்றுவதற்காக சமாதானம்பண்ணவேண்டிய முயற்சிகளை நீங்கள் எடுக்கிறீர்களா? நான் ஜெபிக்கிறேன் என்று சொல்லி ஒருவேளை நீங்கள் நழுவிவிடலாம். ஆனால் அதற்கு மேற்பட்ட உத்தரவாதத்தை தேவன் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார். தேவபிள்ளைகளே, சமாதானம்பண்ணுகிறவர்களாக உங்களை அர்ப்பணித்து, கர்த்தருடைய அடிச்சுவடுகளில் நீங்கள் நடக்க வேண்டும் அல்லவா?

நினைவிற்கு:- “சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களில் தொடுத்தவர்களாயும் …. நில்லுங்கள்” (எபே. 6:15,16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.