Appam, Appam - Tamil

மார்ச் 10 – சத்துருக்கள்மேல் அன்பு!

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் (மத். 5:44).

நம்மேல் அன்பு செலுத்துகிறவர்களையும், நமக்கு உதவி செய்து நம்மைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறவர்களையும் நேசிப்பது எளிது. ஆனால் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கவேண்டுமென்று முயற்சிக்கிற சத்துருக்களை நேசிப்பது மகா கடினமானது.

ஆனால் கல்வாரியினுடைய அன்பினால் உள்ளம் நிரப்பப்படும்போது எதுவுமே கடினமாயிருப்பதில்லை. நீங்கள் சத்துருக்களாக இருந்தபோது, இயேசு உங்களைத் தேடி வந்தார் அல்லவா? பாவிகளாகவும், அக்கிரமக்காரராகவும் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களாகவும் இருந்தபோது அவர் எவ்வளவாய் அன்பு பாராட்டி, பாவங்களை மன்னித்து, தம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொண்டார்! அந்த அன்பினால் நீங்களும் சத்துருக்களைச் சிநேகிக்கமுடியும்.

சத்துருக்களைச் சிநேகிப்பதில் கிறிஸ்துவே முன்மாதிரியானார். அவருடைய சத்துருக்கள் அவரை சிலுவையில் அவ்வளவாய் பாடுபடுத்தினபோதும் அவர் அவர்கள் மீது அன்பு செலுத்தி, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக். 23:34) என்று மன்றாடினாரல்லவா? அதுதான் சத்துருக்களைச் சிநேகிக்கும் அன்பு.

இயேசு சொன்னார், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத். 5:44).

பழைய ஏற்பாட்டிலும்கூட கர்த்தர் இந்தப் பிரமாணத்தை இஸ்ரவேலருக்குச் சொல்லியிருந்தார். “உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக” (யாத். 23:4,5).

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (லூக். 6:35) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கிறிஸ்து பிரசங்கித்ததையே அப்போஸ்தலர்களும் பிரசங்கித்தார்கள். அவர்களும் சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று சொன்னார்கள். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; …. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோம. 12:20,21).

தேவபிள்ளைகளே, சத்துருக்களைச் சிநேகிப்பதால் உங்களுடைய உள்ளத்தில் தெய்வீக சமாதானம் குடிகொள்ளும். உங்கள் செய்கைகளைக் கண்டு கர்த்தர் மனம் மகிழுவார் என்கிற நிச்சயத்தைப் பெறுவீர்கள். மாத்திரமல்ல, சத்துருவையும் உங்கள் பட்சமாய் ஆதாயப்படுத்திக்கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்” (நீதி. 24:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.