No products in the cart.
மார்ச் 07 – இரக்கமுள்ளவர்கள்!
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத். 5:7).
இந்த வசனம் இரட்டிப்பான பாக்கியத்தை நமக்குத் தருகிறது. நாம் மற்றவர்களுக்கு இரக்கம் செய்யும்போது, நமக்கு சந்தோஷமும் பாக்கியமும் கிடைக்கிறது. மட்டுமல்ல, இரக்கத்தைப் பெறும்போதும் சந்தோஷமும், பாக்கியமும் கிடைக்கிறது. வேதத்திலுள்ள இரண்டாவது பிரதான கட்டளை, நீ உன்னை நேசிக்கிறதுபோல பிறனையும் நேசி என்பதாகும். உள்ளத்தில் அன்பு இருக்கும்போது நம்முடைய நேரத்தையும், பொருளையும், ஆலோசனையும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து இரக்கம் பாராட்டி உதவி செய்யமுடியும்.
ஒரு முறை ஒருவர் வேடிக்கையான கதை ஒன்றை சென்னார். ஒரு வீட்டிற்குமுன் ஒரு ஏழைப் பிச்சைக்காரன் பசியோடு வந்து நின்றான். மருமகள், ‘ஒன்றும் இல்லை, போ’ என்று சொல்லி, அவனை விரட்டி அனுப்பினாள். மாமியாருக்கு கோபம் வந்துவிட்டது. “நீ எப்படி அவனைப் போ என்று விரட்டலாம்? நான் அல்லவா இந்த வீட்டுக்கு உரிமையானவள்? ஒருவரை வா என்று சொல்லுவதற்கும், போ என்று சொல்லுவற்கும் உனக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்லி வீட்டை விட்டுப்போன பிச்சைக்காரனை மறுபடியும் மாமியார் அழைத்துக்கொண்டுவந்தார்.
வீட்டுக்கு முன் நின்ற அந்த பிச்சைக்காரனைப் பார்த்து, “என் மருமகள் உன்னை போ என்று சொன்னால் நீ எப்படிப் போகலாம்? நான் தானே இந்த வீட்டிற்கு சொந்தக்காரி? என் கட்டளைகளைத்தான் நீ ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த பிச்சைக்காரனைப் பார்த்து, ‘இப்பொழுது நான் சொல்லுகிறேன், வீட்டில் ஒன்றுமில்லை நீ போகலாம்’ என்றாளாம். எதிர்பார்ப்போடு இரக்கம் கிடைக்குமா என்று வந்த அந்த பிச்சைக்காரனுக்கு ஏமாற்றமாயிருந்தது.
வேறு சிலர் யாசிப்பவர்களுக்கு முன்பாக ஒரு ரூபாயை எறிந்துவிட்டு, பார்க்கக்கூட செய்யாமல் சென்றுவிடுகிறார்கள். நாம் பெரிய இரக்கம் செய்துவிட்டோம். நம்முடைய கடமை முடிந்தது என்று அத்துடன் திருப்தியடைந்துவிடுகிறார்கள். இது இரக்கமல்ல. இரக்கம் என்பது ஆழமானது. அது வெறும் மனதுருக்கத்தோடு நின்றுவிடுவதில்லை. ஒரு மனிதனுடைய பிரச்சனையோடு நின்றுவிடுவதில்லை. ஒரு மனிதனுடைய பிரச்சனையோடு தன்னை ஒன்றாய் இணைத்துக்கொண்டு அந்த பிரச்சனையிலிருந்து அவன் மீளும்படி அவனுக்காக உண்மையாய் செய்யும் ஒத்தாசையே இரக்கமாகும்.
நவீன காலங்களில் மற்றவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவது ஒரு பெலவீனமாகக் கருதப்படுகிறது. பல வேளைகளில் இரக்கம் பாராட்டப்போய், சிலர் பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளுவதையும் நாம் காண்கிறோம். உலகம் ஓடிக்கொண்டிருக்கிற வேகத்தில் நம்முடைய காரியங்களையே நாம் கவனிக்க நேரமில்லாமல் காணப்படும்போது, மற்றவர்களுடைய கஷ்டநஷ்டங்களை கவனிக்க முடிவதில்லை. நமக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை மன்னிப்பதை உலகம் கோழைத்தனமாக நினைக்கிறது. நாம் மற்றவர்கள் மேல் இரக்கம் காட்டாவிட்டால் தேவனுடைய அன்பு நம்மில் இல்லை (1 யோவா. 3:17) என்று வேதம் திட்டமாய்ச் சொல்லுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நீங்கள் சரீரத்திற்கு அடுத்த இரக்கம் மட்டுமல்ல, ஆவிக்குரிய இரக்கத்தையும் புறஜாதியாரின்மேல் காண்பிக்கவேண்டும். இரக்கமாய் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால் அவர்கள் நித்தியத்தை இழந்துவிடுவார்களே. ஒரு மனிதனுக்கு இரங்கி, நீங்கள் செய்யும் எல்லா உதவிகளைப் பார்க்கிலும், மேன்மையான உதவி அவனுடைய ஆத்துமாவிற்கு செய்யும் உதவிதான். தேவபிள்ளைகளே, அவர்களுக்காக ஜெபித்து கிறிஸ்துவை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் அல்லவா?
நினைவிற்கு:- “நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:21).