No products in the cart.
பெப்ருவரி 27 – விசுவாசமும், பயமும்!
“ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார்” என்றார்கள் (லூக். 8:24,25).
பயத்தை விரட்ட முக்கியமான ஒரு வழி உண்டு. அதுதான் விசுவாசமாகும். விசுவாசம் ஒரு தெய்வீக சக்தி, வல்லமை. நம்முடைய அருமை ஆண்டவர் விசுவாசத்தினால், உலகங்களையெல்லாம் உருவாக்கினார். அவர் மனுஷகுமாரனாக பூமியிலே வந்தபோது, செய்த கிரியைகளெல்லாம், விசுவாசத்தின் அடிப்படையிலே இருந்தன.
“விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற். 9:23). “நீ விசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவா. 11:40) என்று இயேசு சொன்னார்.
ஒருமுறை இயேசு தமது சீஷரோடுகூடப் படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். படகு செலுத்தப்படுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே திடீரென சுழல்காற்றுண்டானபோது, சீஷர்கள் மிகவும் பயந்தார்கள்.
நித்திரையாயிருந்த இயேசுவை அவர்கள் அவசரமாகத் தட்டி எழுப்பி, ‘ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம்’ என்றார்கள். அப்பொழுது இயேசு, நித்திரையிலிருந்து எழுந்து, காற்றையும், ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே அவைகள் நின்றுபோயிற்று (லூக். 8:22-24).
அப்பொழுது, அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்று கேட்டார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: “இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்” (லூக். 8:25).
பயத்தை மேற்கொள்ள, தெய்வீக விசுவாசம் தேவை. “விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16). விசுவாசிக்கிறவன் கர்த்தரில் பெலன்கொண்டு, எந்த பயங்கரமான ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும், அவற்றை எதிர்த்து நின்று ஜெயம்பெறுவான்.
ஆனால், பயம் என்பது ஒரு எதிர்மறையான வல்லமையாகும். அதன் பின்னால், சாத்தானும், அவனுடைய தூதர்களும் நிற்கிறார்கள். ஆனால் விசுவாசத்திற்கு பின்னணியில், கர்த்தர் இருக்கிறார். உதாரணமாக, கர்த்தர் வெளிச்சமாய் நிற்கும்போது, சாத்தான் இருளாய் நிற்கிறான். ஆனால், வெளிச்சம் உதிக்கும்போது, இருள் மறைந்துபோகிறது. நீதியின் சூரியனாகிய கர்த்தர் உதிக்கும்போது, பயமுறுத்துகிற பாதாள வல்லமைகள், சூரியனைக் கண்ட பனிபோல ஓடி, ஒழிந்துபோகும்.
“பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு” என்ற வார்த்தை வேதத்தில் திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கிறோம் (மாற். 5:36, லூக். 8:50). ஒருவன் விசுவாசத்தில் பெலமுள்ளவனாய் இருப்பானென்றால், எல்லா பயத்தின் ஆவிகளின்மேலும், ஜெயம்பெறுவான். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா என்பதுதான் கர்த்தர் உங்கள்முன் வைக்கும் கேள்வி.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் தேவனை விசுவாசித்து, என்னென்ன அரியபெரிய காரியங்களைச் செய்தார்கள் என்பதை, எபி. 11-ம் அதிகாரத்தில் வாசித்தறியலாம். தேவபிள்ளைகளே, நீங்களும் விசுவாசத்தினாலே பயத்தை ஜெயித்து, வெற்றிநடைபோடுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத். 21:22).