Appam, Appam - Tamil

பெப்ருவரி 09 – விசுவாச சேனைகள்!

“அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்” (எசே. 37:10).

நம்முடைய கர்த்தருடைய நாமம், ‘சேனைகளின் கர்த்தர்’ என்பதாகும். பல இடங்களில் ‘சேனைகளின் அதிபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். அவர் சேனைத் தளபதியாக நமக்கு ஆதரவாயிருப்பது எத்தனை மகிழ்ச்சியானது! கர்த்தருடைய சேனையில் முதலாவது, திரளான தேவதூதர்களுண்டு. இரண்டாவது, திரளான நட்சத்திரங்களுண்டு. மூன்றாவது, திரளான அக்கினி இரதங்களும் குதிரைகளுமுண்டு. மட்டுமல்ல, கர்த்தருடைய சேனையில் திரளான விசுவாசிகளுமுண்டு.

இன்றைக்கு உலகத்தில் மிக முக்கியமானதாக, கிறிஸ்தவ மார்க்கம் இருக்கிறது. கிறிஸ்தவ மார்க்கத்தில் கர்த்தரை உத்தமமாய் சேவிக்கிற கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கிறார்கள். ஒருவருடைய பாரத்தை மற்றொருவர் சுமக்கிறார். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நின்று, ஜெபத்திலே மன்றாடுகிறார்கள், கையோடு கைகோர்த்து, தோளோடு தோள் நின்று, கர்த்தருடைய சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள்.

பொதுவாக, அதிகமானபேர் இருக்கிறதை ‘திரள் கூட்டம்’ என்று சொல்லுவார்கள். ஆனால் சேனை என்பது, முற்றிலும் வித்தியாசமானது. சேனையிலே ஒழுங்கு, கட்டுப்பாடு, மனஉறுதி ஆகியவை இருக்கும். சேனையிலுள்ள வீரர்கள் பயிற்சியெடுத்திருப்பார்கள். மனோதிடன் உள்ளவர்களாயிருப்பார்கள்.

சேனைகளின் கர்த்தர், தம் விசுவாசிகளை, ஒரு சாதாரணக் கூட்டமாக வைக்கவில்லை. பயிற்சி கொடுத்து, கர்த்தருடைய சேனை வீரர்களாக வைத்திருக்கிறார். தேவனுடைய முக்கிய நோக்கம் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனையை நாம் முறியடிக்கவேண்டும் என்பதே. சாத்தானுடைய சாம்ராஜ்யத்தை சரிந்து விழச்செய்து, கர்த்தருடைய இராஜ்யத்தை உலகத்திலே கட்டியெழுப்பவேண்டும்.

இதற்காகவே கர்த்தர் உங்களை உயிர்ப்பித்து, தன்னுடைய இரத்தத்தாலே கழுவி, பரிசுத்தப்படுத்தி, யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார். “என் கைகளைப் போருக்கும், என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (சங். 144:1) என்று தாவீது சொல்லுகிறார்.

எல்லா யுத்தங்களிலும் மேன்மையான யுத்தம், முழங்கால் யுத்தமாகும். ஒரு தேவபிள்ளை, முழங்காலில் நிற்கும்போது, பாதாளம் நடுநடுங்குகிறது. சத்துருவினுடைய சேனை அலறி ஓடுகிறது. அப்படிப்பட்ட முழங்கால் வீரனுக்கு உதவி செய்யும்படி, எண்ணற்ற தேவதூதர்கள் இறங்கி வருகிறார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்தும், பார்வோனுடைய அடிமைத்தனத்திலிருந்தும் வெளியே வந்தபோது, ஒரு சேனையாய் இருக்கவில்லை. அவர்களுக்குள் அடிமை மனப்பான்மை இருந்தது. ஆனால் கர்த்தர் அவர்களை ஒரு பெரும்சேனையாக உருவாக்குவதற்காகவே வனாந்தரத்துக்குக் கொண்டுவந்தார். யுத்த வீரனுக்குரிய உணவாகிய மன்னாவைக் கொடுத்தார். வனாந்தரத்திலே நடந்து நடந்து பலசாலிகளானார்கள்.

தேவபிள்ளைகளே, இந்த நேரங்கள் கர்த்தர் உங்களுக்கு பயிற்சிகொடுக்கிற நேரங்கள். இஸ்ரவேலர் ஏழு ஜாதிகளையும், முப்பத்தியொரு இராஜாக்களையும் முறியடித்து, கானானைச் சுதந்தரித்துக்கொண்டதுபோல நீங்களும் பரம கானானைச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.

நினைவிற்கு:- “என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன். நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்” (எசே. 37:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.