No products in the cart.
பிப்ரவரி 26 – தாவீதுபோல இருப்பான்!
“அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்” (சக. 12:8).
கர்த்தரைத் துதிப்பதே தன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்ட தாவீதை கர்த்தர் மிகவும் அதிகமாய் நேசித்தார். அவனைத் தன் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார். மட்டுமல்ல, அவருக்கு அளவற்ற அபிஷேகத்தையும், தீர்க்கதரிசனமான சங்கீதங்களையும் கொடுத்தார்.
தாவீது சத்துருக்களுக்கு முன்பாக அபிஷேகம்பண்ணப்பட்டார். சகோதரர்களுக்கு முன்பாக அபிஷேகம்பண்ணப்பட்டார். சகல இஸ்ரவேல் சபைக்குமுன்பாகவும் அபிஷேகம்பண்ணப்பட்டார். எதிரிகளை கீழ்ப்படுத்தும் வல்லமையை கர்த்தர் தாவீதுக்கு கொடுத்து சத்துருக்களை அவர் பாதபடிக்குக் கீழ்ப்படுத்தினார்.
தாவீது கோலியாத்தோடு போர் புரிந்தபோதும், அதற்குப்பின் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான யுத்தங்களிலேயும், கர்த்தர் தாவீதுக்கு ஜெயத்தின்மேல் ஜெயத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
தேவபிள்ளைகளே, பல தோல்விகளின் பாதையிலே நீங்கள் கடந்து வந்தீர்களோ? சந்தோஷத்தை இழந்து பலவீனப்பட்டு தள்ளாடியபடி நின்றுகொண்டிருக்கிறீர்களோ? கலங்காதேயுங்கள்! தாவீதின் குமாரனாகிய இயேசு முற்றிலும் ஜெயங்கொண்டவராய் இருக்கிறார்.
நீங்கள் தாவீதைப்போல கர்த்தரைத் துதிக்க உங்களை ஒப்புக்கொடுப்பீர்களானால் கர்த்தர் உங்கள் கூடாரத்தை நிலைப்படுத்துவார். உங்கள் தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்துவார். அப்பொழுது நீங்கள் அப். பவுலோடு சேர்ந்து, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று உற்சாகமாய் சொல்லுவீர்கள்.
உங்கள் கூடாரம் தாவீதின் கூடாரமாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கூடாரத்தில் தேவபிரசன்னம் இருக்கும். தேவ மகிமை இருக்கும். ஆடல் பாடல் மகிழ்ச்சி இருக்கும். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிற உங்களுக்கு அவர் சகலவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்தருளுவார். நீங்கள் பெலனுள்ளவர்களாய் மாறுவீர்கள்.
மீண்டும் ஒருமுறை சகரியா தீர்க்கதரிசியின்மூலமாய் கர்த்தர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தத்தை வாசித்துப்பாருங்கள். “அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்” (சக. 12:8).
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், “விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” என்று எபி. 11:33,34-ல் வாசிக்கிறோம். தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தரைத் துதித்துத் துதித்து பெலன்கொள்ளுவீர்களாக.
நினைவிற்கு:- “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சிடுவேன்” (சங். 27:1).
