No products in the cart.
பிப்ரவரி 21- பின்பற்றுங்கள்!
“நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்” (ரூத் 1:16).
நாம் எப்படிக் கர்த்தரைப் பின்பற்ற வேண்டுமென்பதற்கு பழைய ஏற்பாட்டிலே ஒரு அருமையான சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. ரூத் என்ற இளம்பெண் தன் மாமியாரை எவ்விதமாய் பின்பற்றினாள் என்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. மட்டுமல்ல, கிறிஸ்துவைப் பின்பற்றும்படி நம்மை ஏவி எழுப்பவும் செய்கிறது.
ரூத் ஒரு புறஜாதிப்பெண்தான். மோவாபிய வம்சத்தை சேர்ந்தவள். லோத்துக்கும், அவனுடைய மூத்த மகளுக்குமிடையே நடந்த தவறான உறவின்மூலமாக மோவாப் சந்ததி உருவாயிற்று. மோவாப் என்ற வார்த்தைக்கு, தகப்பனின் சந்ததி என்று அர்த்தம். கர்த்தருக்கு சித்தமில்லாதபடி அருவருப்பான முறையிலும், தகாத உறவினாலும் அந்த சந்ததி வந்ததினாலே கர்த்தர் அந்த சந்ததியை அருவருத்தார். “அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம்தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” என்று தெளிவாய் கூறியிருந்தார் (உபா. 23:3).
மோவாபிய சந்ததியிலே வந்த ரூத் இஸ்ரவேலிலே சம்பந்தம் கலந்தாள். நகோமியை மாமியாராய் ஏற்றுக்கொண்டாள். ஆனால் அந்த குடும்பத்தில் பல சோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தன. நகோமியின் கணவன் மரித்தார். ரூத்தின் கணவர் மரித்தார். மட்டுமல்ல, நகோமியின் அடுத்த மகனும் மரித்தான். நகோமி மோவாபிய தேசத்திலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பத் தீர்மானித்தாள். அப்போது மூத்த மருமகளான “ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள். ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).
ரூத்தின் தீர்மானம் என்ன தெரியுமா? “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்” (ரூத் 1:16,17).
அவளது உறுதியைக்கண்டு கர்த்தர் ரூத்தை ஆசீர்வதித்தார். அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைக் கட்டளையிட்டார். அவளுடைய தலைமுறையிலே தாவீதும், இயேசுவும் பிறந்தார்கள். கிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றிலே நான்கு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிலே ரூத்தும் ஒருவள். ரூத் தன் மாமியாரைப் பின்பற்றிவந்து இஸ்ரவேலின் அத்தனை ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொண்டாள்.
சீயோன் மலையின்மேல் ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் நின்றதை அப். யோவான் கண்டார். அவர்கள் யார்? வேதம் சொல்லுகிறது, “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே” (வெளி. 14:4). ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றுகிறவர்கள் அவருடைய இராஜ்யத்திலே ஆட்டுக்குட்டியானவரோடு என்றைக்கும் தங்கியிருப்பார்கள். நமக்காக அவர் மேன்மையான வாசஸ்தலங்களை உண்டாக்கியிருக்கிறாரே! தேவபிள்ளைகளே, கர்த்தரைப் பின்பற்றுவீர்களாக.
நினைவிற்கு:- “நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும், உன் பிள்ளைகளுக்கும், என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்” (யோசு. 14:9).