No products in the cart.
பிப்ரவரி 14 – மனமகிழ்ச்சியினால் பிரியம்!
“மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்” (உன். 7:6).
நீங்கள் கர்த்தரைப் பிரியப்படுத்தவேண்டுமென்றால் எப்போதும் அவருடைய சமுகத்தில் மனமகிழ்ச்சியோடு இருக்கவேண்டும், சந்தோஷமாய்க் காணப்படவேண்டும். துதித்து ஆராதித்து அவரை நேசிப்பதை தெரியப்படுத்தவேண்டும். அப்பொழுது அவர் அன்போடு, “மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே” என்று அழைப்பார்.
அநேகர் கர்த்தருடைய சமுகத்திலே வரும்போது முறுமுறுப்போடும், சந்தேகங்களோடும் வருகிறார்கள். ஆனால் முக மலர்ச்சியோடும், மனமகிழ்ச்சியோடும், விசுவாசத்தோடும் கர்த்தருடைய சமுகத்திலே வருவீர்களென்றால், நிச்சயமாகவே நீங்கள் கர்த்தருக்குப் பிரியமுள்ளவர்களாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை மிகவும் அன்போடு எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே அவர்களை மீட்டுக்கொண்டார். சிவந்த சமுத்திரத்தின் வழியாக அவர்களை அவர் அற்புதமாக வழிநடத்தினார். ஒவ்வொரு நாளும் மன்னாவினால் போஷித்தார். கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ எதற்கெடுத்தாலும் முறுமுறுத்துக் கொண்டேயிருந்தார்கள். “எங்களுக்கு வெறும் மன்னாதானா? எகிப்தில் நாங்கள் கொம்மட்டிக் காய்களை சாப்பிட்டோமே, வெள்ளைப்பூண்டுகளை சாப்பிட்டோமே என்றார்கள். தொடர்ந்து மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். கர்த்தர் ஏற்படுத்தின ஊழியருக்கு விரோதமாய் எதிர்த்து நின்றார்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை” (1 கொரி. 10:5). அவர்கள் முறுமுறுத்ததே அதன் காரணம். ஒன்றை மட்டும் திட்டமாய் அறிந்து கொள்ளுங்கள். முறுமுறுப்பு என்பது கர்த்தருக்கு அருவருப்பானது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.
சிலரைப் பார்த்து, “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் உடனே அவர்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். சிலர் “ஆண்டவருக்கு கண் இல்லையா? காது இல்லையா? ஏன் எங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுப்பதில்லை?” எனப் புலம்புவார்கள். ஆனால் ஒரு சிலரோ கர்த்தர் எந்த நிலைமையில் அவர்களை வைத்திருந்தாலும் சந்தோஷமாய் முகமலர்ச்சியோடிருப்பார்கள். அவர்களுடைய வீடுகளிலெல்லாம் கர்த்தருடைய பிரசன்னம் நிறைவாயிருக்கும். ஆசீர்வாதங்கள் மிகுதியாய் இருக்கும்.
அப். பவுல் எழுதுகிறார், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” என்று எழுதுகிறார் (பிலி. 4:11,12). நம்மிடையே காணப்படக்கூடிய அப்படிப்பட்டவர்களை நிச்சயமாகவே, “மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே” என்று கர்த்தர் அழைப்பார்.
நீங்கள் எப்போதும் மனமகிழ்ச்சியாய் இருந்தால் தாவீது இராஜாவோடுகூட சேர்ந்து, “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என்று சந்தோஷமாய் கூற முடியும் (சங். 34:1). தேவபிள்ளைகளே, எப்போதும் கர்த்தரை சந்தோஷப்படுத்துங்கள்!
நினைவிற்கு:- “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).