Appam, Appam - Tamil

பிப்ரவரி 10 – கீழ்ப்படிதலே பிரியம்!

“பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்” (நீதி. 21:3).

தேவனானவர் பலியின்மேல் பிரியப்படுவார் என்றும், பலிகளைச் செலுத்தி அவரைச் சமாதானம் செய்து பிரியத்தைப் பெற்றுவிடலாம் என்றும் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் எண்ணினார்கள். எவ்வளவு பாவமான காரியங்களைச் செய்து முரட்டாட்டம் செய்தாலும், பலிகளைச் செலுத்தி பாவமன்னிப்பைப் பெற்றுவிடலாம் என்று அவர்கள் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்.

கர்த்தர் சவுலிடம், “நீ அமலேக்கியரோடு யுத்தம் செய்து அவர்களை மடங்கடித்து, சங்கரித்து, ஜனங்களையும் மிருக ஜீவன்களையும் முற்றிலும் அழித்துப்போடு” என்று கட்டளையிட்டிருந்தார். அப்படியே சவுல் யுத்தம் செய்தார். அமலேக்கியரின் மேல் வெற்றி கொண்டார். ஆனாலும் அமலேக்கியரின் ஆடு மாடுகள் அவருடைய உள்ளத்தை கவர்ச்சித்தது. கர்த்தருடைய வார்த்தைக்கு அவர் முற்றிலும் கீழ்ப்படியவில்லை!

வேதம் சொல்லுகிறது: “ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்” (1 சாமு. 15:9).

கர்த்தர் அந்த காரியத்தின்மேல் பிரியப்பட்டிருப்பாரா என்பதை சிந்தித்துப் பாருங்கள். வானம் அவருடையது, பூமியும் அவருடையது, ஆகாயத்துப் பறவைகளும், நடமாடும் சகல மிருக ஜீவன்களும் கர்த்தருடையவை. அமலேக்கிய இராஜாவின் ஆடுமாடுகளைப் பார்க்கிலும் ஆயிரமாயிரமான மடங்கு அதிகமாக கர்த்தர் சவுல் ராஜாவுக்கு கொடுத்திருக்கிறார். ஆயினும் கர்த்தருடைய வார்த்தைக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனது அவருடைய உள்ளத்தை வேதனைப்படுத்தியது. தம்முடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேலை சவுலிடம் அனுப்பினார்.

“நீ கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன? ….கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும், பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (1 சாமு. 15:19,22).

சவுல் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கர்த்தரைப் பிரியப்படுத்தியிருந்திருக்கலாம். கர்த்தரைப் பிரியப்படுத்தியிருந்தால் சவுலின் சிங்காசனம் நிலைத்திருக்கும். ஆனால் சவுல் கீழ்ப்படியாததினாலே அவர் ராஜ்யபாரத்தை இழந்து போனார். எத்தனை பரிதாபம்!

நீங்கள் முற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்குப் பிரியமானவர்களாய் காணப்படுவீர்கள். கர்த்தருடைய கட்டளைகள் பாரமானவைகள் அல்ல. அவை எளிதானவை. அவருடைய சுமை இலகுவானது. ஆகவே எதைச் செய்தாலும் “இது கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்குமா, இந்த செயலின்மீது கர்த்தர் மனம் மகிழுவாரா, நான் செல்லுகிற இடங்களுக்கு சந்தோஷத்தோடு என்னோடுகூட வருவாரா” என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பாருங்கள்.

தேவபிள்ளைகளே, எப்போதும் கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். கீழ்ப்படிந்து கர்த்தருக்குப் பிரியமானவன் என்ற நற்சாட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்” (சங். 119:35).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.