No products in the cart.
பிப்ரவரி 07 – பிரியமான தானியேல்
“நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது” (தானி. 9:23).
வேதத்தில் ஏனோக்கு, “தேவனுக்குப் பிரியமானவன்” என்று அழைக்கப்பட்டார். ஆனால் தானியேலைக் குறித்து வேதம் சொல்லும்போது இன்னொரு படி அதிகமாக “மிகவும் பிரியமானவன்” என்று விவரிக்கிறது.
தானி. 10:11-ல் “பிரியமான புருஷனாகிய தானியேலே” என்றும், தானி. 10:19 – ல் “பிரியமான புருஷனே” என்றும், தானி. 9:23 – ல் “நீ மிகவும் பிரியமானவன்” என்றும் கர்த்தர் சொல்லி அழைப்பதை நாம் வேதத்தில் காண்கிறோம். கர்த்தர் உங்களையும் அவ்விதமாய் அழைப்பார் என்றால் அது எத்தனை பாக்கியமானதாக இருக்கும்! கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?
நீங்கள் கர்த்தரைப் பிரியப்படுத்தி, நேசித்து அவரிடத்தில் அன்புகூர்ந்தால் நிச்சயமாகவே கர்த்தருடைய பிரியம் எப்போதும் உங்கள்மேல் இருக்கும். தேவனுக்குப் பிரியமானது எது என்பதை நீங்கள் சோதித்தறிந்து, அவரையே பிரியப்படுத்தும்போதுஉங்கள் வாழ்க்கையெல்லாம் சமாதானமும், சந்தோஷமும் நிரம்பியிருக்கும். கர்த்தரும் உங்களை ஆசீர்வதித்து தம்முடைய சித்தத்தின் பாதையிலே நடத்துவார்.
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் செய்யவேண்டிய இரண்டு காரியங்கள் உண்டு. முதலாவது, தேவனுக்குப் பிரியமில்லாதவைகளை தன்னைவிட்டு அகற்றுவதும், தேவனுக்குப் பிரியமானதைச் செய்வதுமே அவை.
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடப்பதும், பாவிகளுடைய வழிகளில் உட்காருவதும் தேவனுக்குப் பிரியமில்லை என்று தெரிந்தால் அவற்றை நீங்கள் உங்களிடமிருந்து அப்புறப்படுத்தவேண்டும். கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருப்பது அவருக்குப் பிரியம் என்றால், அந்தப் பிரியத்தின்படியே நீங்கள் செய்ய வேண்டும்.
மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்க வேண்டுமோ? மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?” (மீகா. 6:7,8).
பாருங்கள்! தானியேல் கர்த்தரைப் பிரியப்படுத்த தீர்மானித்திருந்ததினால், “இராஜாவின் திராட்சரசமும், போஜனமும் தன்னைத் தீட்டுப்படுத்திவிடக்கூடாது” என்று உறுதியான தீர்மானம் எடுத்திருந்தார்.
மாத்திரமல்ல, இராஜாவைத் தவிர வேறு யாரைத் தொழுதுகொண்டாலும் சிங்ககெபியிலே போடப்படவேண்டுமென்ற சட்டம் வந்திருந்தபோதிலும், அவர் கர்த்தரையே தொழுது அவரைப் பிரியப்படுத்தத் தீர்மானித்தார். அதனால் கர்த்தர் அவர்மேல் பிரியம் வைத்து சிங்கங்கள் அவரைச் சேதப்படுத்தாதபடி அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது கர்த்தருக்குப் பிரியமானது எது என்பதையும் பிரியமில்லாதது எது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நினைவிற்கு:- “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி.11:6).