No products in the cart.
பிப்ரவரி 06 – பிரியமான விசுவாசம்
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி. 11:6).
கர்த்தர் உங்கள்மேல் பிரியமாய் இருப்பதற்கு அவர்மேல் நீங்கள் வைத்த விசுவாசமே காரணமாகும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று வேதம் சொல்லுகிறது.
ஆம், நீங்கள் அவரை நம்ப வேண்டும். நூற்றுக்கு நூறு முழுவதுமாக உங்களுடைய விசுவாசத்தை அவர்மேல் வைக்கவேண்டும். “ஆண்டவரே நான் உம்மை நம்பி விசுவாசிக்கிறேன்” என்று ஆயிரம் முறை அறிக்கையிடுங்கள். அறிக்கையிட்டபடியே அந்த விசுவாசத்தை செயல்படுத்தவும் செய்யுங்கள். அழிந்துபோகிற பொன்னானது, அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிறஉங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1:7).
“வாழ்க்கையில் விசுவாசம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். வேதம் சொல்லுகிறது, “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). உங்கள் வாழ்க்கையில் விசுவாசம் உருவாவதற்கு தேவ வசனம் மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆவியும் ஜீவனுமாய் இருக்கிற வேத வசனம் கிறிஸ்துவின் பிரியத்தை உங்கள்மேல் கொண்டுவர பெரும்பங்கு வகிக்கிறது. நீங்கள் அவரில் விசுவாசம் வைத்து அவரைச் சார்ந்துகொள்ளும்போது, அவர் உங்கள்மேல் மனம் மகிழுவார். உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.
கர்த்தர் ஆபிரகாமின்மேல் பிரியம் வைத்ததின் இரகசியம் ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததேயாகும். “தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதைநிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்றுமுழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவரானான்” (ரோமர் 4:21). அவரது விசுவாசத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது, தன் சரீரமும், சாராளின் கர்ப்பமும் செத்துப்போனதை எண்ணாதிருந்தார். இரண்டாவது, கர்த்தர் தனக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்பதை எண்ணினார். மூன்றாவது, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டேவிசுவாசத்தில் வல்லவரானார். ஆகவே தேவனுக்குப் பிரியமானவராய் விளங்கினார்.
ஆபிரகாமைப்போல உங்கள் சரீர பெலவீனத்தை எண்ணாதேயுங்கள். தோல்விகளையும், குடும்பத்திலுள்ள இக்கட்டான சூழ்நிலைகளையும் எண்ணாதேயுங்கள். உங்களுடைய குறைவுகளையும், அதைரியங்களையும் எண்ணாதேயுங்கள். அதே நேரத்தில் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை தவறாமல் எண்ணிப்பாருங்கள்.
வேதத்தில் கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் எண்ணிப்பாருங்கள். பின்பு, “ஆண்டவரே இவைகளையெல்லாம் நீர் என் வாழ்க்கையில் செய்யப்போகிறதற்காக ஸ்தோத்திரம்” என்று சொல்லி அவரை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுது நீங்களும்கூட ஆபிரகாமைப்போல விசுவாசமுள்ளவர்களாய், தேவனைப் பிரியப்படுத்துவீர்கள்.
தேவபிள்ளைகளே, நம் தேவன் விசுவாசத்தின் தேவன். அவர் தம் விசுவாசத்தினால் உலகத்தை எல்லாம் சிருஷ்டித்தார். சிருஷ்டிப்பிலே விசுவாசத்தை செயல்படுத்தின ஆண்டவர் உங்களிலே விசுவாசத்தைக் காணும்போது நிச்சயமாகவே சிருஷ்டிப்பின் வல்லமையை வெளிப்படுத்துவார். கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
நினைவிற்கு:- “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1).