Appam, Appam - Tamil

பிப்ரவரி 05 – பிரியமான பிழைப்பு

 “துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளைவிட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்” (எசே. 18:23).

“துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?” என்று கர்த்தர் கேட்கிறார். இங்கே சரீர மரணத்தைக் குறித்து சொல்லப்படவில்லை. இங்கு சொல்லப்பட்டிருக்கிற மரணம் ஆத்தும மரணமாகும்.

ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவனுக்குள் இருக்கிற ஆத்துமா மரிக்க ஆரம்பிக்கிறது. ஆகவேதான் “பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோம. 6:23). என்றும், “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:20) என்றும், வேதம் நமக்கு சொல்லுகிறது.

பாவத்தின்விளைவாக ஆத்தும மரணமடைகிற ஒரு மனுஷன் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலை நோக்கிச்செல்லுகிறான். நித்திய வேதனையை நோக்கிச்செல்லுகிறான். அவன் ஆத்துமா மரணமடைந்த நிலைமையில் மீட்புக்கு எந்த வழியும் இல்லாமையால் பாதாளத்தில் இறங்கிவிட நேருகிறது. ஆகவேதான் கர்த்தர், “துன்மார்க்கன் சாகிறது எனக்குப் பிரியமாய் இருக்குமோ?” என்று கேட்டார்.

கர்த்தர்மனுக்குலத்தையே முற்றிலுமாக நேசிக்கிறார். மனிதனைத் தம்முடைய சாயலின்படியும் ரூபத்தின்படியும் சிருஷ்டித்திருக்கிறார். மனுஷனுக்கு நல்ல சரீரத்தைக் கொடுத்து பூமியிலே அனுப்பி வைத்திருக்கிறார். மட்டுமல்ல, அவன் இரட்சிக்கப்படுவதற்குஎன்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் அவர் கல்வாரிச் சிலுவையிலே செய்து நிறைவேற்றியிருக்கிறார்.

நம்ஆத்துமா மரணத்தினின்று விடுதலையாக்கப்படுவதற்காகத்தான்இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்தார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனை தமது மரணத்தினாலே வென்று, தம்முடைய உயிர்த்தெழுதலான நித்திய ஜீவனை நமக்குத் தந்தார்.

இயேசுசொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).

பழையஏற்பாட்டிலே இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து தேவனுக்கு விரோதமாய் முறுமுறுத்தபோது, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியிலே கொள்ளிவாய் சர்ப்பத்தை அனுப்பினார். கொள்ளிவாய் சர்ப்பத்தினால் தீண்டப்பட்டவர்கள் மிகவும் வேதனையடைந்து மரணத்தை நோக்கிச்சென்றார்கள்.

அப்பொழுதுஅவர்கள், மோசேயினிடத்தில் முறையிட்டு கெஞ்சியபோது கர்த்தர் வெண்கல சர்ப்பம் ஒன்றை செய்யச்சொல்லி ஒரு கம்பத்தின்மேல் அதனைத் தூக்கி வைக்கும்படி கட்டளையிட்டார். கொள்ளிவாய் சர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்கள் விசுவாசத்தோடு அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்தபோது பிழைத்துக்கொண்டார்கள் (எண். 21:8,9). வெண்கல சர்ப்பமானது புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாயிருக்கிறது.

தேவபிள்ளைகளே,ஆத்தும மரணத்திலிருந்து நீங்கள் நீங்கலாகி பிழைக்க வேண்டுமென்றால், இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கவேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

நினைவிற்கு:-“தம்முடையஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.