No products in the cart.
நவம்பர் 09 – பக்தியுடன் பாடு!
“சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி …. ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ.3:16,17).
பாடுவது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது. “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்” என்றார் யாக்கோபு.
எந்த சூழ்நிலையிலும், எந்தக் காலத்திலும், எந்தப் போராட்டவேளையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடு துதித்துப் பாடுபவனே உண்மையான கிறிஸ்தவன். பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தொழு மரங்களில் கட்டப்பட்டிருந்த சூழ்நிலையிலும் கர்த்தரைப் பாடித் துதித்தார்கள் அல்லவா?
சங்கீதப் புத்தகம் முழுவதுமே பாடல்களினால் நிரம்பியிருக்கிறது. அங்கே மோசேயின் பாடலைப் பார்க்கிறோம், சாலொமோனின் பாடலைப் பார்க்கிறோம், சங்கீதக்காரனாகிய தாவீதின் பாடலைப் பார்க்கிறோம், ஆசாபின் பாடலைப் பார்க்கிறோம். பலவிதமான சூழ்நிலைகளிலும், போராட்டங்களிலும் விசுவாசிகள், தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் பாடின பாடல்கள் நம்மை ஏவி எழுப்புகின்றன.
தமிழில் ‘சங்கீதப் புத்தகம்’ என்று குறிக்கப்பட்டிருப்பது எபிரெய மொழியில், ‘துதி ஆராதனை புத்தகம்’ என்று அழைக்கப்படுகிறது. இது வெறும் பாடல் மட்டுமல்ல, இசைக் கருவிகளை மீட்டி, தாளம் தட்டி, ராகத்தோடு கர்த்தரை மகிமைப்படுத்துவதாகும்.
இந்த சங்கீதங்களில் விண்ணப்பங்கள் உண்டு, ஊக்கமான ஜெபங்கள் உண்டு, துயர நேரங்களில் பாடப்பட்ட இதயக்குமுறல்களும் உண்டு. ஏராளமான சங்கீதங்கள் இருந்தாலும் ‘ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள்’ என்று அழைக்கப்படும் சங்கீதங்கள் நம்முடைய உள்ளத்தைத் தொடுபவையாய் இருக்கின்றன (சங்.72:20).
தமிழ்நாட்டிலே முதன்முதல் ஆங்கிலேயர்களுடைய பாடல்களை மொழிபெயர்த்து பாமாலைப் பாடல்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு இந்திய கவிஞர்கள் சுத்தமான அழகிய தமிழிலே, இந்திய இராகங்களில், பாடல்களை இசைத்துப் பாடினார்கள். அந்தப் பாடல்கள் ஆழமான கருத்துடையவை. உள்ளத்தை தொடக்கூடியவை.
இவ்வழியிலே அதிகமான பாடல்கள் வேதநாயகம் சாஸ்திரியார் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக இயற்றிப் பாடியவையாகும். இந்தப் பாடல்களெல்லாம் கீர்த்தனைகள் என்று அழைக்கப்பட்டன.
கன்வென்ஷன் கூட்டங்களிலும், எழுப்புதல் கூட்டங்களிலும் ஞானப்பாட்டு என்ற பொதுவான பாடல்களைப் பாடினார்கள். அதன் பின்பு சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் ஏராளமான பாடல்களைப்பாடி பாடல்களிலே எழுப்புதலையும், தெய்வீகத்தையும், தேவ அன்பையும் பரப்பினார்கள்.
இந்தக் கடைசி நாட்களில் கர்த்தர் அநேகம் பாடல்கள் இயற்றுகிறவர்களையும், இணையதளத்தில் வெளியிடுகிறவர்களையும், துதி ஆராதனை செய்கிறவர்களையும் எழுப்பியிருக்கிறார். அவர்களுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்.
தேவபிள்ளைகளே, பாடல்களினால் ஒருவருக்கொருவர் போதித்து, ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். கர்த்தரை இருதயத்திலே பக்தியுடன் போற்றுங்கள். கர்த்தர் அதற்கான கிருபையை உங்களுக்குத் தருவார்.
நினைவிற்கு:- “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்” (சங்.104:33).