No products in the cart.
நவம்பர் 29 – வல்லவனானார்!
“தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோம. 4:21).
வல்லமையைத் தரித்துக்கொள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். வல்லமையை எப்படித் தரித்துக்கொள்ளுவது? ஆபிரகாம், தான் வல்லமையை தரித்துக்கொண்ட வழிமுறையை மேலேயுள்ள வசனத்தின்மூலமாக நமக்குத் தெரியப்படுத்துகிறார். அந்த வசனத்தை முழுமையாக வாசியுங்கள். “தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்.”
இந்த வசனத்தில் நான்கு கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். முதலாவது, நம்முடைய தேவன் வல்லவர் என்பது. தேவன் வாக்குத்தத்தம்பண்ணியதை நிறைவேற்ற வல்லவர். இரண்டாவது, அந்த வல்லமையை முழு நிச்சயமாய் நம்புவது. மூன்றாவது, தேவனை மகிமைப்படுத்துவது. நான்காவது, விசுவாசத்தில் வல்லவனாவது.
நாம் ஆராதிக்கிற நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர். வானாதி வானங்களைச் சிருஷ்டித்த அவர் வல்லமையுள்ளவர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் அந்தரங்கத்திலே தொங்கவிட்டு நிலைநிறுத்துகிற அவர் வல்லமையுள்ளவர். அவருடைய வல்லமை மற்ற எல்லா வல்லமைகளையும் மேற்கொள்ளுகிற ஒரு வல்லமை. அது சர்வ வல்லமை. கர்த்தரை நாம் எவ்வளவுக்கெவ்வளவு வல்லமையுள்ளவர் என்று போற்றுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்மேலே தேவனுடைய வல்லமை இறங்கி வரும்.
கர்த்தருடைய கண்கள், “யாருக்கு என் வல்லமையைக் கொடுக்கலாம், யாருக்கு என் வரங்களைக் கொடுக்கலாம்” என்று ஆவலோடு நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தம்முடைய வல்லமை விளங்கப்பண்ணும்படி அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
சிம்சோன்மேல் தேவனுடைய வல்லமை அளவில்லாமல் இறங்கி வந்தபோது அவனைக் கட்டியிருந்த அத்தனை கயிறுகளும், கட்டுகளும், அக்கினி பட்ட நூல்போல எரிந்து சாம்பலாய்ப் போனது. கர்த்தருடைய வல்லமை உங்களை நிறைக்கும்பொழுது எந்த சூனியக்கட்டும், செய்வினைக்கட்டும் உங்களை நெருங்கவேமுடியாது. உங்களை அவர் அக்கினி ஜுவாலையாக மாற்றுவார். இன்று முதல் உங்களுடைய வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனையை அவர் கட்டளையிட விரும்புகிறார்.
ஆபிரகாமுக்கு கர்த்தர் வாக்குப்பண்ணி சந்ததியைத் தருவேன் என்று சொன்னார். கர்த்தர் நிச்சயமாகவே அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடுகூட ஆபிரகாம் கர்த்தரைச் சார்ந்துகொண்டார். கர்த்தர் கொடுத்த வல்லமையினாலேயே வானத்தின் நட்சத்திரங்களைப்போன்ற சந்ததியைப் பெற்றுக்கொண்டார்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் கர்த்தருடைய இன்னொரு வல்லமையைச் சார்ந்துகொண்டார்கள். அதுதான் தப்புவிக்கும் வல்லமை. விடுவிக்கிற வல்லமை. (தானி. 3:17). அவர் வல்லவர் வல்லவர் என்று முழங்கின முழக்கத்தின்படியே கர்த்தர் அவர்களை அக்கினிச்சூளைக்கும், இராஜாவின் கைக்கும் தப்புவித்தார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரானால், அவர் அதை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் என்பதை அறிக்கையிடுங்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் விடப்போவதில்லை.
நினைவிற்கு:- “சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்” (தானி. 6:22).