No products in the cart.
நவம்பர் 26 – சிந்தனை ஒரு யுத்தக்களம்!
“அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).
அநேகர் தங்களது சிந்தனை மண்டலம் ஒரு யுத்தக்களம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். கற்பனை உலகத்தில் வாழ்ந்து எண்ணங்களில் பாவம் செய்கிறார்கள். நினைவுகள், எண்ணங்கள், சிந்தனைகளைக்குறித்து ஜாக்கிரதையாய் இல்லாவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கையிலே தோல்வியைத் தழுவவேண்டியது வரும்.
அநேகர் இரவுவேளைகளில் ஜெபிப்பதில்லை. டெலிவிஷன் முன்பாக உட்கார்ந்துகொண்டு மாம்ச இச்சைகளைத் தூண்டிவிடுகிற ஆபாச நடனங்களை இரசித்துக்கொண்டிருப்பார்கள். இதனால் இரவில் வரும் சொப்பனங்களிலே, ஆபாசத்தைக் கொண்டுவருகிற அசுத்த ஆவிகள் அவர்களை ஆட்கொள்ளுகின்றன. அவர்கள் தங்கள் எண்ணங்களிலே வீணராய்ப் போகிறார்கள்.
வேதம் சொல்லுகிறது, “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி. 23:7). எண்ணங்கள் ஒரு மனிதனை உருவாக்குகிறது. எண்ணங்கள் வார்த்தையாகி, வார்த்தை செயலாகி, செயல் அவனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
ஒரு மனிதனுக்கு நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல நினைவுகள் இருக்குமென்றால், அவன் சிறந்த மனிதனாய் விளங்குவான். எண்ணங்களை ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்தால் அவர் பரலோக சிந்தனைகளைத் தருவார்.
அப். பவுல் எழுதுகிறார், “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:4,5). கெட்ட எண்ணங்கள் உள்ளத்தில் எழும்பும்போதே கர்த்தரைத் துதிக்கிற பாட்டை உள்ளத்தில் கொண்டுவந்து சாத்தானை எதிர்த்து நில்லுங்கள்.
இயேசுகிறிஸ்து கொல்கொதா மேட்டிலே தமது மாபெரும் யுத்தத்தைச் செய்தார். ‘கொல்கொதா’ என்றாலும், ‘கபாலஸ்தலம்’ என்றாலும் ‘மண்டையோடு’ என்பதுதான் அர்த்தம். அங்கே இருந்துதான் எண்ணங்களும், சிந்தனைகளும் புறப்பட்டு வருகின்றன. இயேசுவின் தலையிலே முள்முடி சூட்டப்பட்டு தலையிலிருந்து வழிகிற இரத்தத்தினாலே, சிந்தனையிலே ஜெயத்தைக் கொடுக்கச் சித்தமானார்.
ஒரு கிணற்றின்மேல் ஆயிரம் பறவைகள் பறக்கலாம். அதைப்போல் ஒரு மனிதனுடைய சிந்தனையில் ஆயிரம் எண்ணங்கள் ஓடலாம். ஆனால் சில பறவைகள் அந்தக் கிணற்றின்மேல் உட்கார இடம் கொடுத்தால், அது அங்கே எச்சம் இடுகிறது. எச்சத்தில் இருக்கும் ஆல விதைகள் அங்கே விழுந்து முளைக்குமானால் அது மரமாகி முடிவில் அந்தக் கிணற்றையே தூர்த்துப்போட்டுவிடும்.
தேவபிள்ளைகளே, தீய எண்ணங்களுக்கு இடம் கொடுப்பீர்களானால், அது உங்கள் இருதயத்தில் வேர்கொள்ளும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையே தூர்ந்துப்போய்விடுகிறது. ஆகவே, உங்களது ஒவ்வொரு எண்ணத்திலும் பரிசுத்தத்தைக் கொண்டுவந்து, யுத்தத்தில் ஜெயமெடுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோம. 12:2).