No products in the cart.
நவம்பர் 26 – இம்மட்டில்!
“இம்மட்டில் நிறுத்துங்கள்” (லூக். 22:51).
இம்மட்டில் நிறுத்துங்கள்! கிறிஸ்துவின் அன்பான வேண்டுகோள் இது! பட்டயத்தை எடுத்த பேதுருவையும், இன்னும் சூழ நின்றவர்களையும் நோக்கி இம்மட்டில் நிறுத்துங்கள் என்றார் இயேசு. பட்டயம் எடுப்பதை நிறுத்துங்கள், காயப்படுத்தினதை நிறுத்துங்கள், காதற வெட்டினதை நிறுத்துங்கள், இரக்கம் இல்லாமல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள் என்பதே அவரது வேண்டுகோள்.
அநேகர் எதற்கெடுத்தாலும் தங்கள் சுயபெலனாகிய பட்டயத்தை உருவிவிடுகிறார்கள். தாங்களே தங்களுடைய கைகளிலே நியாயத்தை எடுக்கிறார்கள். கர்த்தருக்கும் காத்திருப்பதில்லை, தேசச்சட்டங்களுக்கும் காத்திருப்பதில்லை. “இம்மட்டில் நிறுத்துங்கள்” என்று கர்த்தர் சொல்கிறார்.
நீங்கள் உங்களுக்காக யுத்தம் செய்யும்போது, கர்த்தர் அமைதியாயிருந்துவிடுகிறார். ஆனால் கர்த்தர் கைகளில் உங்கள் பொறுப்புகளை ஒப்புக்கொடுக்கும்போது, உங்களுடைய யுத்தங்களைச் செய்ய அர்ப்பணிக்கும்போது, அவர் மிக அருமையாக மேன்மையான முறையில் யுத்தம் செய்து உங்களுக்கு ஜெயத்தைத் தருவார்.
மோசே சொன்னார், “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14). இதுவரை நீங்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தால், உருவின பட்டயத்தோடு இருந்திருந்தால், உள்ளத்தில் கோபமும், வைராக்கியமும், கசப்பும் வைத்துக்கொண்டிருந்தால், கர்த்தர் உங்களைப் பார்த்து அன்போடு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்கிறார்.
அன்றைக்கு நல்லவேளையாக பிலேயாமின் கைகளில் பட்டயம் இல்லை. அவனுடைய கோபவெறியையெல்லாம் கழுதையின்மேல் செலுத்தினான். கழுதை ஏன் தனக்கு கீழ்ப்படியவில்லை என்பதைக்குறித்து அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவன் வழிவிலகி வயலிலே நடந்த கழுதையைக்கூட பலமுறை அடித்தான். அடிப்பதை இம்மட்டிலே நிறுத்த விரும்பிய கர்த்தர், அதைக் கழுதையின்மூலமாக தீர்க்கதரிசிக்கு உணர்த்தினார். ஆம், ‘நீர் என்னை இப்போது மூன்றுதரம் அடிக்கும்படி நான் என்ன செய்தேன்’ என்று அந்த கழுதை கேட்டது.
பிலேயாமுக்கோ, எரிச்சலும் கோபமும் இன்னும் அடங்கவில்லை. கழுதைப் பேசுகிறதைக்குறித்து அவன் ஆச்சரியப்படவுமில்லை. தேவதூதன் ஒருவன் நின்று கழுதையைத் தடுக்கிறதையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் அந்த கழுதையைப் பார்த்து, “நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்” (எண். 22:29) என்று சொல்லி உறுமினான்.
‘நான் மட்டும் இரட்சிக்கப்படாமல் இருந்தால், அவனை ஒரு கை பார்த்துவிடுவேன். நான் மட்டும் அபிஷேகம்பெறாமல் பழைய மனுஷனாய் இருந்தால் அவனுக்கு நல்ல பாடம் கற்பித்துவிடுவேன்’ என்று அநேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாமல் மாம்ச கண்களினால் பார்க்கிறவர்கள்தான் பட்டயத்தை உருவுவார்கள். கர்த்தரோ இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, பட்டயம் எடுப்பதை நிறுத்துங்கள். அதோடு உங்கள் பாவ ஜீவியத்தையும் நிறுத்துங்கள்.
நினைவிற்கு:- “தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவ@ர என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்” (சங். 62:1,2).