No products in the cart.
நவம்பர் 25 – கர்த்தரால் புகழ்!
“தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2 கொரி. 10:18).
உலகம் புகழுக்காக ஏங்குகிறது. அரசியல்வாதிகள் தங்களுடைய புகழுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவழிக்கிறார்கள். சுயவிளம்பரத்தைத் தேடுகிறார்கள். தங்களைப்பற்றிய செய்திகள் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்.
வீதிகளிலே தங்களுடைய புகைப்படங்களையும், பெரிய பதாகைகளையும் வைப்பதுடன், கூலிக்கு ஆள் வைத்துத் தங்கள் புகழ்பாட ஏற்பாடு செய்கிறார்கள்.
கொரிந்துசபை வளர்ந்துவந்தபோது ஆவியின் வரங்கள் அங்கே செயல்படத் தொடங்கின. சகல தாலந்துகளும், கிருபைகளும், வரங்களும் நிரம்பிய சபையாய் அது இருந்தது. கர்த்தருடைய வருகைக்காக தன்னை ஆயத்தம் செய்த சபையாகவும் இருந்தது. ஆனாலும் அந்த சபையில் அநேகம்பேர் தங்களைத்தாங்களே மெச்சி, தங்களைத்தாங்களே புகழ்ந்து பெருமையடைந்ததைக் கண்டு, அப். பவுல், “தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல” என்று சொன்னார்.
ஒருமுறை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மலைப் பிரசங்கத்தை நிகழ்த்தியபோது, “எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” என்று சொன்னார் (லூக். 6:26).
நம்முடைய வழிகளையும், வாழ்க்கையையும் தேவன் தம் தராசில் நிறுத்துப்பார்க்கும்பொழுது குறைவு இருந்தால் அதைச் சுட்டிக்காண்பிப்பார். நிறைவாய் இருந்தால் பாராட்டுவதற்குத் தயங்கமாட்டார். பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் வாழ்க்கையையும் செயலையும் தேவனுடைய தராசு நிறுத்துப் பார்த்தது. “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்று ஆண்டவர் எழுதினார். தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைவுள்ளவனாகக் காணப்பட்டாய் என்று அர்த்தம். அந்தக் குறைவினிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவன்மேல் வந்தது. அந்த இரவு அவன் கொலை செய்யப்பட்டான்.
அதேநேரம், கர்த்தருக்குப் பிரியமானபடி நடந்துகொள்ளும்பொழுது கர்த்தர் அதை கவனித்து, தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்திப் புகழ்ந்து பேசுகிறார். “கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2 கொரி. 10:18).
கர்த்தர் நோவாவை புகழ்ந்து சொன்னார், “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதி. 7:1). புகழ்ந்தது மட்டுமல்ல; ஜலப்பிரளயத்திலிருந்து நோவாவைக் காக்கும்படி, நோவாவுக்கு ஆலோசனைக் கொடுத்தார். அப்படியே அந்தப் பேழையில் நோவாவையும், அவன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டார்.
நோவா அவ்வளவாய் கர்த்தரால் புகழப்படுவதற்குக் காரணம் என்ன? வேதம் சொல்லுகிறது: “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” (ஆதி. 6:9). தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனோடு நடக்கும்பொழுது, தேவ சமுகத்தில் அதிக நேரம் ஜெபத்திலே தரித்திருக்கும்பொழுது, நீதிமானும், உத்தமனுமாய் விளங்குவீர்கள்.
நினைவிற்கு:- “தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்” (1 தெச. 2:4).