bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

நவம்பர் 23 – வற்றாத நீருற்று!

“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11).

கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் எத்தனை அருமையானவை! எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்காகவே கொடுக்கப்படுகின்றன. நீங்கள் அதை உரிமைபாராட்டி சுதந்தரித்துக்கொள்ளும்போது அவை ஆம் என்றும், ஆமென் என்றும் விளங்குகின்றன.

சில ஏரி குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடும். ஆனால் கோடைக்காலம் வரும்போது தண்ணீர் வற்றிவிடும். தமிழ் நாட்டில் அநேக ஆறுகள் உண்டு. மழைக்காலத்தில் அவற்றில் தண்ணீர் ஓடினாலும் மற்ற காலங்களில் மணல்தான் இருக்கும். கொஞ்சகாலம் ஆசீர்வாதங்கள் இருக்கின்றன. பிறகு வறட்சி காணப்படுகிறது.

ஆனால் தேவனுடைய பிள்ளைகள் வறண்டுபோவதில்லை. வற்றிப்போவதில்லை. துவண்டு போவதில்லை. நீங்கள் வற்றாத நீரூற்றாய் விளங்குகிறீர்கள். கர்த்தர் உங்களை வற்றாத நீரூற்றுக்கு ஒப்பிடுகிறார். வற்றாத நீரூற்றிலிருந்து வருடம் முழுவதும் இனிமையான தண்ணீர் சுரந்துகொண்டே இருக்கிறது. கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒருபோதும் வற்றிப்போவதில்லை. அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற நன்மைகளும், கிருபைகளும், ஆசீர்வாதங்களும் வற்றிப்போவதேயில்லை. ஜீவஊற்று உம்மிடத்திலிருக்கிறது (சங். 36:9) என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்துவீர்களாக.

இந்த நீரூற்றானது குறைவை நிறைவாக்கும் ஒரு நீரூற்று ஆகும். ஒரு தீர்க்கதரிசியின் மனைவி வீட்டில் குறைவு ஏற்பட்டது. கடனைத் தீர்க்க முடியாத நிலை. ஆனால் கர்த்தர் அந்த வீட்டிலுள்ள பானையில் நீரூற்றைச் சுரக்கச் செய்தார். அந்த குடத்திலிருந்து எண்ணெய் சுரந்து வந்துகொண்டே இருந்தது. காலியான பாத்திரங்கள் இருக்கும் வரையிலும் அது வற்றிப்போகவே இல்லை. அந்த பானையில் எண்ணெய் இருந்ததுபோல உங்களுக்குள் ஆவியானவரின் அபிஷேகம் இருக்கிறது. அது ஒரு நீரூற்று அல்லவா? நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்று இயேசு சொன்னாரே (யோவான் 4:14).

உலகத்தார் தாகத்தினால் நாவறண்டு தவிக்கிறார்கள். ஜீவநீரூற்று எங்கே என்று தேடுகிறார்கள். கர்த்தர் சொல்லுகிறார்: “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல் அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்கு செவிகொடுத்து இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும் வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி…. உண்டுபண்ணுவேன்” (ஏசாயா 41:17-19).

கிறிஸ்து ஒருவர்தான் உங்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்கிறவர். அவர்தான் ஜீவத்தண்ணீரைத் தருகிறவர். உலக மக்கள் சிற்றின்பங்களையும், பாவங்களையும், பணத்தையும் தாகத்தோடு தேடுகிறார்கள். ஒருநாளும் அவர்கள் திருப்தி அடைகிறதில்லை. ஆனால் கர்த்தரோ உங்களுடைய தாகத்தை தீர்ப்பதுடன், உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் மாற்றும்படி உங்களுக்குள்ளிருந்து நீரூற்றைப் பொங்கப் பண்ணுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரு நீரூற்றாயிருக்கிறபடியால் கர்த்தரை துதிப்பீர்களாக!

நினைவிற்கு :- “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.