No products in the cart.
நவம்பர் 23 – தெரிந்தெடுத்தார்!
“நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்” (எபே. 1:4,5,6).
கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவர் நம்மை தமக்கென்று மீட்டெடுத்திருக்கிறார். அவர் நம்மை தம்முடைய பிள்ளைகளாகும்படி முன்குறித்திருக்கிறார். கர்த்தர் நம்மைத் தெரிந்தெடுத்தது எத்தனை மேன்மையானது!
ஒருவர் பிரதம மந்திரியாக உயர்வு பெறுவது சாதாரண காரியமல்ல. முதலில் அவர் பாராளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினராக ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அவருடைய கட்சி அதிகமான இடங்களைப் பெற்றிருக்கவேண்டும். சக உறுப்பினர்கள் அவரைத் தேர்ந்தெடுக்க சம்மதிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரால் பிரதம மந்திரியாகமுடியும். தேசத்தின் அத்தனை கோடி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஒருவர் தேசத்தை வழிநடத்திச்செல்லுவார்.
நம்மைப் பரலோகக்குழு தெரிந்தெடுத்திருக்கிறது. இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய பிதா நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். முழு உலகத்திலுள்ள கோடானுகோடி மக்கள்நடுவே அவருக்கென்று சிறு கூட்டத்தை தெரிந்தெடுத்திருக்கிறார். நாம் அந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் மத்தியிலே இருப்பது எத்தனைப் பெரிய பாக்கியமானது!
கர்த்தர் நம்மை எப்பொழுது தெரிந்தெடுத்தார் தெரியுமா? ஆபிரகாமைப்போல கிறிஸ்துவுக்குமுன் இரண்டாயிரம் ஆண்டிலே நம்மைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தெரிந்துகொண்டார். நம்முடைய தெரிந்தெடுப்பு அநாதி காலத்திற்குரியது.
நம்மைத் தெரிந்துகொண்ட ஆண்டவரைக் குறித்து, “ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங். 90:1,2) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இது எத்தனை ஆச்சரியமானது! இது நம்முடைய புத்திக்கு எட்டாததாயிருக்கிறது. இதற்காக ஆண்டவரை கோடானகோடிமுறை ஸ்தோத்திரித்தாலும் அது தகும்.
நாம் தேவனுடைய பிள்ளைகளானது என்பது ஏதோ தற்செயலாய் நடந்துவிட்ட காரியமல்ல. அது தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படியே முன்குறிக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டதினால் விளைந்த ஒன்றாகும். எல்லாப் பக்கங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறதைக் கேட்கிறோம். ஆனாலும் நாம் அதைக் கேட்டபோது அதை விசுவாசிக்கும்படியாக ஆவியானவர் நம்முடைய உள்ளத்தில் கிரியை செய்தார்.
நம்முடைய வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும்படியாக உள்ளத்தில் தீர்மானத்தைத் தந்தார். பாவத்தை அறிக்கையிட்டு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டோம். இதுவே தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
தேவபிள்ளைகளே, பிதாவானவர் நம்மைத் தெரிந்துகொண்டு கிறிஸ்துவின் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
நினைவிற்கு:- “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்” (யோவா. 15:16).