No products in the cart.
நவம்பர் 20 – கரும்புள்ளி
“நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத். 7:3).
ஒருநாள் ஒருபோதகர் தன் சபையிலே தேவனுடைய வார்த்தையை பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக ஒரு பெரிய வெள்ளைக் காகிதத்தை எடுத்து சுவரிலே பொருத்தினார். சபையில் உள்ளவர்கள் எல்லாரும் அதைப் பார்த்தார்கள். அந்த பெரிய காகிதத்திலே ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு கருப்பு நிறமான ஒரு புள்ளியை வைத்தார். பின்பு போதகர் அந்த சபையாரைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். எல்லோரும், “கரும்புள்ளியைப் பார்க்கிறோம்” என்றார்கள். அதிகமாய் இருந்த வெள்ளைப்பகுதியைக்காட்டிலும் அந்த சிறு புள்ளியே அவர்கள் கண்களில் பிரதானமாய்த் தெரிந்தது.
அதுபோலவே சிலர், மற்றவர்கள் செய்த பெரிய உதவிகளை மறந்துவிடுகிறார்கள். அவர்களில் காணப்படும் சிறு குறையை பெரிதுபண்ணி முறுமுறுக்கிறார்கள். கர்த்தர் செய்த எண்ணற்ற நன்மைகளை மறந்துவிடுகிறார்கள். ஒரு ஜெபத்திற்கு கர்த்தர் பதில் அளிக்க சற்று தாமதமாகும்போது, காத்திராமல் முறுமுறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இன்றைய மனிதர்களுடைய நிலை என்ன? மற்றவர்களுடைய கண்களிலிருக்கிற துரும்பைப் பெரிதுபடுத்திக் குறைகூறிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் கண்களிலிருக்கிற உத்திரத்தையோ அவர்கள் உணருவதில்லை. மற்றவர்கள்மேல் குற்றங்கண்டுபிடிக்கும் அநேக சுயநீதிமான்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
“அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்” (சங். 36:2,3) என்று தாவீது குறிப்பிடுகிறார். இப்படிப்பட்டவர்களைக்குறித்து ஏசாயா, “அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்” (ஏசா. 44:20) என்று எழுதுகிறார்.
நீங்கள் எப்பொழுதும், கர்த்தருக்கு முன்பாகவும், தேவனுடைய பிள்ளைகளுக்கு முன்பாகவும் தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு கிருபையளித்து உங்களை மேன்மைப்படுத்துவார். நீங்கள் ஆசீர்வாதமாய் விளங்குவீர்கள்.
மற்றவர்கள்மேல் குற்றம் கண்டுபிடிப்பது எளிது. அவர்களைக் குற்றவாளிகளாக தீர்ப்பதும் எளிது. ஆனால் உத்தமனோ, தன்னை தேவ சமுகத்திலே தாழ்த்தி, தன்னுடைய குற்றங்குறைகளை ஆராய்ந்தறிந்து, அவைகளைச் சீர்ப்படுத்த முயற்சிக்கிறான். மற்றவர்களைக்குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறதை விட்டுவிட்டு தன்னை தற்பரிசோதனை செய்து பார்க்கிறான்.
ஏசாயா அப்படித் தன்னைப் பரிசோதனை செய்து, “ஐயோ, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்” என்று கதறியபோது, கர்த்தர் ஏசாயாவை மாபெரும் தீர்க்கதரிசியாய் உயர்த்தி மேன்மைப்படுத்தினார். தேவபிள்ளைகளே, மற்றவர்களிடம் குறைகளைப் பார்க்கும்போது அவர்களுக்காக மன்றாடி ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்” (கலா. 6:3).