No products in the cart.
நவம்பர் 19 – வஞ்சனையின் சிந்தை
“என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்” (ஆதி. 27:41).
ஏசா தன்னுடைய ஆவிக்குரிய போராட்டத்திலே தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம், தன்னுடைய மனதிலே கசப்பு, வைராக்கியம், பழி வாங்க வேண்டுமென்ற வஞ்சம் ஆகியவற்றைக்கொண்டிருந்ததுதான்.
வேதம் சொல்லுகிறது, “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” (1 பேது. 3:9).
“நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:23,24).
“ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” (எபி. 12:15,16).
எவ்வளவுதான் ஏசா கர்த்தரைப் புறக்கணித்தபோதிலும், ஏசாவுக்கும், அவன் சந்ததிக்கும் கர்த்தர் தொடர்ந்து இரக்கம் பாராட்டிக்கொண்டேயிருந்தார். இஸ்ரவேலரிடம் கர்த்தர், “ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்” என்று அன்புடன் சொன்னார் (உபா. 23:7).
ஏதோமியரோ, தொடர்ந்து இஸ்ரவேலரை பகைத்துக்கொண்டே இருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கானானுக்குப் போகும்போது, ஏதோமியர் தேசத்தின் வழியாகப் போகும்படி உத்தரவு கேட்டார்கள். ஆனால் ஏதோமியர், “நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்” (எண். 20:18).
ஏரோதின் வம்சத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, அவன் தகப்பன், ஏசாவின் வழியில் வந்த ஏதோமியன் என்பதை அறியலாம். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டபோது, பெத்லெகேமிலும் அதன் சகல எல்லைகளிலும் இருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் ஏரோது கொலைசெய்தான் (மத். 2:16).
அதுபோல இயேசுவின் சீஷனாய் இருந்த யாக்கோபைப் பட்டயக்கருக்கினால் வெட்டினான். கடைசி வரையிலும் தேவனுடைய ஊழியத்திற்கு எதிர்த்து நின்றவன்தான் இந்த ஏரோது (அப். 12:1,2).
ஏசாவின் சந்ததியின்மேல் கர்த்தருடைய பயங்கரமான சாபம் வந்தது. அவர்கள் கடைசிவரை கர்த்தரண்டை திரும்பி வரவேயில்லை. மனஸ்தாபப்படவில்லை, மனந்திரும்பவில்லை. ஆகவே கர்த்தர் ஏசாவின் சந்ததியை பூமியில் இராதபடிக்கு அழித்தார். இன்றைக்கு உலகத்தில் ஏசாவின் சந்ததி என்பதே இல்லை.
நினைவிற்கு:- “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).