bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

நவம்பர் 19 – நானே செய்வேன்!

“கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும் அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் (எசேக். 36:36).

கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியின்மூலமாய் பாபிலோன் சிறையிருப்பிலுள்ள மக்களுக்கு அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். நான் உங்களை மீண்டும் எழுப்பிக் கட்டுவேன். நிர்மூலமானவைகளை மீண்டும் கட்டி எழுப்புவேன். பாழான நிலத்தை பயிர்நிலமாக்குவேன் என்று வாக்களித்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்பிலே நம்பிக்கையற்று இருந்தார்கள். இது நடக்கிற காரியம்தானா என்று சந்தேகித்தார்கள். ஆகவே கர்த்தர், ‘கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்’ என்றார்.

நம்முடைய தேவன் வாக்குத்தத்தங்களின் தேவன். வேதம் முழுவதிலும் ஆயிரமாயிரமான வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் தான் கொடுத்த எல்லா வாக்குகளையும் நிறைவேற்றி, தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தியிருக்கிறார். தேவனுடைய பிள்ளைகள் செய்யவேண்டியதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக்கொள்ளுவதுதான்.

கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரென்றால் அதை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். எத்தனை சோதனைகளும், பாடுகளும் வந்தாலும், அந்த வாக்குத்தத்தத்தை விட்டுவிடாதேயுங்கள். மறந்துவிடாதேயுங்கள்.

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய வாழ்க்கைமுறைமையை வாசித்துப்பாருங்கள். அவர்கள் எப்பொழுதெல்லாம் ஜெபித்தார்களோ, அப்பொழுதெல்லாம் வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜெபித்தார்கள். ‘நீர் இப்படிச் சொன்னீரே, செய்யும்’ என்று அவர்கள் மன்றாடினார்கள்.

நம்முடைய அருமை ஆண்டவர் வார்த்தைகளைச் சொல்பவர் மட்டுமல்ல. என்ன வார்த்தைகளை சொல்லுகிறாரோ, அதை நிறைவேற்ற அவர் வல்லமையுள்ளவர். “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்” (சங். 33:9). அவர் எல்லாவற்றையும் செய்ய வல்லமையுள்ளவர்.

யோபு சொல்லுகிறார், “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு 42:2). நினைத்ததே தடைபடாது என்று வேதம் சொல்லும்போது, அவர் சொன்னது எப்படித் தடைபடும்? நிச்சயமாகவே அதை நிறைவேற்றுவார். அவர் பொய்யுரைக்க மனிதன் அல்ல; மனம்மாற ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ?

யோசேப்பின் வாழ்க்கையை வாசித்துப்பாருங்கள். சிறு வயதிலேயே ஆண்டவர் யோசேப்பை நேசித்தார். தரிசனங்கள்மூலமாக யோசேப்போடுகூட பேசினார். காலம் கடந்துசென்றது. அந்த சொப்பனங்கள் நிறைவேறுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆயினும் கர்த்தர், தான் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி, யோசேப்பின் சகோதரர்கள் அவரைப் பணிந்துகொள்ளும்படிச் செய்தார். தேவபிள்ளைகளே, “அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை” என்பதை அறிவீர்கள் (1 சாமு. 3:19).

நினைவிற்கு:- “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசா. 55:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.