No products in the cart.
நவம்பர் 19 – காணப்படாமற்போன ஏனோக்கு!
“ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்” (ஆதி. 5:24).
ஒருமுறை ஒரு தேவனுடைய ஊழியக்காரர் சொன்னார், ‘நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்தபோது, தேவனோடு நடக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. உலகமும், அதன் மேன்மையும் என்னைக் கவரவில்லை. வேலை செய்வதைப்போன்றே கர்த்தருடைய சமுகத்தில் காலைவேளையிலே ஓடிவந்து, எட்டு மணிநேரம் ஜெபிக்கிறேன்’ என்று சொன்னார்.
இன்னொரு பக்தன், ‘தினந்தோறும் பாவங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு கர்த்தருடைய சமுகத்தில் நான்கு மணிநேரம் அந்நிய பாஷையில் பேசி மனம் மகிழுகிறேன்’ என்று சொன்னார். கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்த மரியாளும் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் அல்லவா? (லூக். 10:42).
தேவனோடு மெய்மறந்து நடந்துகொண்டிருந்த ஏனோக்கு, திடீரென்று காணப்படாமற்போனார். நான் சிறுகவேண்டும், அவர் பெருகவேண்டும் என்று யோவான்ஸ்நானன் சொன்னதுபோல, ஏனோக்கு சிறுகிக் குறுகி மறைந்துபோனார். கிறிஸ்து பெருகி முழுவதுமாய் அவரை நிரப்பிவிட்டார்.
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20) என்று வேதத்தில் சொல்லப்படுகிற உயர்ந்த ஆவிக்குரிய நிலைமைதான் கிறிஸ்துவிலே பரிபூரணப்படும் நிலைமையாகும்.
உங்களைக் காண்கிறவர்கள் உங்களில் கிறிஸ்துவைக் காணவேண்டும். இயேசு கிறிஸ்துவின் அன்பு, காருண்யம், தயவு, மன துருக்கம், பரிசுத்தம், ஆத்தும தாகம் ஆகிய குணாதிசயங்கள் உங்களில் பலுகிப்பெருகவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் உங்கள் நற்குணங்கள் பிரதிபலிக்கவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் கிறிஸ்துவில் பூரணப்படமுடியும்.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற்போனதைப்போல இரண்டாம் வருகையிலே எக்காளம் தொனிக்கும்போது, தேவனோடு நடக்கிறவர்கள் இமைப்பொழுதிலே காணப்படாமற்போவார்கள். காரணம், கிறிஸ்துவின் வருகையிலே மறுரூபமாக்கப்பட்டு, மத்திய ஆகாயத்தில் வெளிப்படும் கிறிஸ்துவை நோக்கி எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
வேதம் சொல்லுகிறது, “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்” (1 கொரி. 15:51-53).
நினைவிற்கு:- “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத். 24:42,44).