No products in the cart.
நவம்பர் 18 – காயங்களை ஆற்றுவேன்!
“நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்” (எரே. 30:17).
அநேக வியாதிகள் மனதில் உள்ள கவலைகளினாலும், பயத்தினாலும், தூக்கமின்மையினாலும் வருகின்றன. மற்றவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிகளையும் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளமுடியாமல் உள்ளூர காயப்பட்டிருக்கிறவர்களுக்கு சரீரம் பாதிக்கப்படுகிறது. மருத்துவர்கள் வெளிப்பூச்சாக எவ்வளவுதான் மருந்து கொடுத்தாலும், உள்ளான காயங்கள் ஆறுகிறவரையிலும் வெளியில் உள்ள நோய் தீருவதில்லை. மனதில் ஆறுதல் இல்லாமலிருப்பதே இதன் காரணம்.
கர்த்தர் நம்முடைய சரீரத்துக்கு மட்டுமல்ல, நம்முடைய ஆவி, ஆத்துமாவுக்கும்கூட ஆரோக்கியத்தைக் கொண்டுவருகிறவர். அவர் மனதிலுள்ள காயங்களையும் குணமாக்குகிறவர்.
அன்னை தெரசா அவர்கள் நடத்திய ஆசிரமத்தின் முதல் முக்கியமான நோக்கம் மனதிற்கு ஆறுதல் கொண்டுவருவதே. இயேசுவின் தெய்வீக அன்பை காண்பிக்க காண்பிக்க ஒருவருடைய மனக்காயங்கள் ஆறுகிறது. காயங்களை ஏற்படுத்தினவர்களை மன்னிக்கிற சுபாவம் உருவாகிறது. பின்பு இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது இரட்சிப்பின் சந்தோஷத்தினால் அவர்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் எல்லாம் குணமாக்கப்படுகிறது.
ஊழியர்களும் சுகமளிக்கிற பணியில் ஈடுபடுகிறார்கள். வைத்தியர்களும் சுகமளிக்கிற பணியில் ஈடுபடுகிறார்கள். ஊழியர்கள் வேதத்தைப் படித்து வேதாகம முறையிலே தெய்வீக சுகத்தைக் கொண்டுவருகிறார்கள். மருத்துவர்களோ வைத்திய சாஸ்திரத்தைப் படித்து அதன்மூலம் சுகத்தைக் கொண்டுவருகிறார்கள். ஆனால், இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு.
தேவனுடைய ஊழியர்கள் முதலாவது ஒரு மனிதனின் ஆத்துமாவில் கவனம் செலுத்துகிறார்கள். ஆத்துமாவில் தெய்வீக சந்தோஷமும், சமாதானமும் வந்தபின்புதான் சரீரசுகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதைத்தான் அப். யோவான், “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” என்று வலியுறுத்திச் சொல்லுகிறார் (3 யோவா. 1:2). ஆம், முதலாவதாக, உங்கள் ஆத்துமா வாழவேண்டும்.
ஆத்துமா வாழவேண்டுமென்றால் ஆத்துமாவில் இருக்கிற பாவம் நீக்கப்படவேண்டும். கல்வாரியின் இரத்தத்தாலே கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படவேண்டும். ஆகவே தாவீது இராஜாவும்கூட முதலாவது ‘அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து’ என்று சொல்லிவிட்டு, அதன்பிறகுதான் ‘உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு’ என்று சொல்லுகிறார் (சங். 103:3,4).
உங்கள் ஆத்துமாவின் நிலையை ஆண்டவரிடத்தில் சொல்லுங்கள். உங்களுடைய உள்காயங்கள் ஆறும்படி காயப்படுத்தினவர்களை மனதார மன்னித்து ஒப்புரவாகிவிடுங்கள். அப்பொழுது உங்கள் சரீர நோய் தானாகவே குணமாகிவிடும். உங்களுக்கு தெய்வீக ஆரோக்கியம் உண்டாகும்.
தேவபிள்ளைகளே, இன்று கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குக்கொடுக்கிறார். “நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26) என்பதே அது.
நினைவிற்கு:- “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17).