No products in the cart.
நவம்பர் 17 – செவிசாய்க்கும் சிந்தை
“குமாரத்தியே கேள், நீ உன் செவியை சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்” (சங். 45:10,11).
ஒருமுறை, ஒரு இளவரசர், தன் தேசத்துக் குடிகளைப் பார்க்க தேரில் பவனி வந்தார். அவர் வரும் வழி முழுவதையும் முன்னதாகவே போர்வீரர்கள் சுத்தப்படுத்தி, ஆயத்தப்படுத்தினார்கள். அங்கே ஒரு ஏழை வாலிபப் பெண், ‘இளவரசர் வருகிறார்’ என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க காத்து நின்றாள். அவளுடைய ஏழ்மையையும், கிழிந்த உடையையும் பார்த்த போர்வீரர்கள், அவளை நிற்கவிடாமல் விரட்டினார்கள்.
அவள் அழுது தேம்பினவளாக, தூரத்திலுள்ள ஒரு மரத்தில் சாய்ந்துகொண்டு இளவரசர் வரும்வழியை பார்த்துக்கொண்டிருந்தாள். குதிரைப்படை, யானைப்படைகளுக்குப் பின்பாக, இளவரசர் கெம்பீரமாய் தன் இரதத்தில் பவனி வந்தார். திடீரென்று அவருடைய கண்கள், தூரத்திலே தன்னை ஆவவோடு பார்த்துக்கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணைக் கண்டது.
உடனே அவர் தன் அருகிலிருந்த மந்திரியைப் பார்த்து, ‘அதோ தூரத்தில் நிற்கிற அந்த பெண்ணை ராஜ மரியாதையோடு அழைத்துக்கொண்டு வாருங்கள். அவளே என் பட்டத்து அரசியாக இருப்பாள்’ என்றார். இமைப்பொழுதில் அவளது ஏழ்மை நிலை முழுவதுமாய் மாறிவிட்டது. எந்த போர்ச்சேவகர்கள் அவளைத் துரத்தினார்களோ, அவர்களே அவளை மிகுந்த மரியாதையோடும், அன்போடும் வரவேற்றார்கள். அவளுக்கு ராஜ வஸ்திரம் தரிப்பிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தாதிகளும், வேலைக்காரிகளும் அவளுக்குப் பணி செய்ய அமர்த்தப்பட்டனர். ஒரு நொடிப்பொழுதில் அவள் அரசியாக உயர்த்தப்பட்டாள்.
வேதத்திலே, ரூத் என்பவள் ஏழ்மையான ஒரு பெண்தான். பரதேசியைப்போல வயலிலே கதிர்களை பொறுக்கினவள்தான். ஆனால் கர்த்தரோ அவளை நேசித்தபடியால், செல்வந்தனாகிய போவாசின் மணவாட்டி ஸ்தானத்துக்கு உயர்த்தினார். போவாஸ் கிறிஸ்துவுக்கு அடையாளம். ரூத் மணவாட்டி சபைக்கு அடையாளம். நகோமி நல்ஆலோசனை கொடுத்து வழிநடத்துவது, பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாகும்.
நகோமி, ரூத்தைப் பார்த்து, “என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?” (ரூத். 3:1) என்று கேட்டாள். ரூத்தின்மேலும், அவளது எதிர்காலத்தின்மேலும், நகோமி கண்ணும்கருத்துமாக இருந்தாள். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கிறிஸ்து என்னும் புருஷருக்கு கற்புள்ள கன்னிகையாக, மாசற்ற மணவாட்டியாக நிறுத்துவதில் வைராக்கியமுள்ளவராக இருக்கிறார்.
தேவபிள்ளைகளே, வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். கிறிஸ்து உங்களுக்கு தகப்பனைப்போல இருக்கிறார். தகப்பன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல அவர் இரங்குகிறார். தாய் தேற்றுவதுபோல உங்களைத் தேற்றுகிறார். சகோதரனைப்போலவும், சிநேகிதனைப்போலவும் இருக்கிறார். நல்ல போதகராகவும், ஆலோசனைக் கர்த்தராகவுமிருக்கிறார். மட்டுமல்ல, ஆத்தும நேசராகவும்கூட இருக்கிறார். அப்படியிருக்கும்போது, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாயும், கறைதிரையில்லாதவர்களாயும் ஜீவிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாய் அமைகிறது.
நினைவிற்கு:- “சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” (வெளி. 19:8).