No products in the cart.
நவம்பர் 16 – மறக்கப்படுவதில்லை!
“யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; …. இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசா. 44:21).
நம்மிடத்திலே பல காரியங்களை கர்த்தர் சொல்லும்போது “மறந்துபோகாதே, மறந்துபோகாதே, இவைகளை நினை;” என்று சொல்லுகிறார். அதே நேரத்தில் அவரும் நம்மை எப்பொழுதும் தம்முடைய நினைவிலேயே வைத்திருக்கிறார். “நீ என்னால் மறக்கப்படுவதில்லை” என்று அன்போடுகூட சொல்லுகிறார்.
“நான் உன்னை சிருஷ்டித்து உருவாக்கினேன். நான் உன்னைத் தேடிவந்தேன். சிலுவை சுமந்த தோள்களிலே உன்னை சுமந்தேன். இரத்தக்கிரயம் செலுத்தி மீட்டேன். நீ என்னுடைய பிள்ளை. நீ என்னுடைய தாசன். நீ என்னால் மறக்கப்படுவதில்லை” என்று சொல்லித் தேற்றுகிறார். “நான் உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரே. 1:5) என்று எரேமியாவைப் பார்த்துச் சொன்னார்.
பாருங்கள், நாம் நமக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் அந்தக் குழந்தைக்கு பெயர் இடுகிறோம். ஆனால், கர்த்தரோ நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமக்குப் பெயரிட்டு அழைக்கிறார். வேதம் சொல்லுகிறது, “இருக்கிறவன் எவனும் தோன்று முன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்” (பிர. 6:10).
யோவான்ஸ்நானகன் பிறப்பதற்கு முன்பதாகவே அவருடைய தகப்பனைப் பார்த்து, “உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” (லூக். 1:13) என்று தேவன் அவரது தூதர்மூலமாகச் சொன்னார்.
அவர் நம்மை உருவாக்கியதாலும், நம்மைத் தேடிவந்ததாலும், நமக்காக சிலுவையிலே இரத்தக்கிரயம் செலுத்தினதினாலும், ஒரு நாளும் அவர் நம்மை மறப்பதில்லை. ஆனாலும், பல வேளைகளிலே நாம் முறுமுறுக்கிறோம்.
“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசா. 49:14-16). ஆகவே சோர்ந்துபோகாதேயுங்கள். அவர் நம்மை மறப்பதேயில்லை.
மீண்டும் கர்த்தர் கேட்கிறார். “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ?” (எரே. 2:32). அப்படி அந்தப் பெண் மறந்துபோனாலும் கர்த்தர் ஒருநாளும் நம்மை மறக்கவேமாட்டார். ஆனால், “என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்” (எரே. 2:32) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை மறந்துபோனீர்களோ? அவருடைய பாதபடியிலே இன்பமாய் காத்திருப்பதை மறந்துபோனீர்களோ? சிந்தித்துப்பாருங்கள். மீண்டுமாய் ஆதி அன்புக்குத் திரும்பிவாருங்கள். அவரோடு ஆழ்ந்த ஐக்கியம்கொள்ளுங்கள். அவருக்கும் உங்களுக்கும் இடையே இருக்கிற உறவு புதுப்பிக்கப்படட்டும்.
நினைவிற்கு:- “உங்கள் கிரியைகளையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே” (எபி. 6:10).