Appam, Appam - Tamil

நவம்பர் 16 – தேவனோடு நடந்த ஏனோக்கு!

“(ஏனோக்கு) …. முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் (ஆதி. 5:22). 

ஒருமுறை தேவனோடு நடந்த படிப்பறிவில்லாத ஒரு ஏழைச் சகோதரியைச் சந்தித்தேன். அவர் கர்த்தரை அளவில்லாமல் நேசித்தார். அவர் மூன்று நான்கு வீடுகளில் வீட்டுவேலை செய்துவந்தார். ஆனாலும் அவர் கர்த்தரோடுகூட நடப்பவராயும், மகிழ்ந்து பாடி ஆராதித்துக்கொண்டிருப்பவராயுமிருந்தார்.

அவர் சொன்னார், “நான் பாத்திரங்களைத் துலக்கும்போது, ஆண்டவரே, நீர் என் உள்ளமாகிய பாத்திரத்தைப் பரிசுத்தமாக்கும்படி, உம்முடைய இரத்தத்தினாலும், வசனத்தினாலும், அபிஷேகத்தினாலும் என்னைச் சுத்தம் செய்யும் என்று கெஞ்சுவேன்.

வீட்டைப் பெருக்கும்போது, ஆண்டவரே, நான் வீட்டைப் பெருக்குகிறேன், நீர் என் உள்ளத்தைப் பெருக்கும். தூசு போன்ற அசுத்தமான கோபங்கள், எரிச்சல்கள், சுயநலங்கள் எல்லாவற்றையும் நீக்கி என்னை சுத்தம்செய்யும் என்று ஜெபிப்பேன். பானையில் அரிசி பொங்க பொங்க என் உள்ளமும் தெய்வீக அன்பினாலும், கர்த்தரைத் துதிக்கிற துதியினாலும் நிரம்பிவிடும்” என்று அவருடைய ஆனந்தமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இளம்தம்பதிகள் கையோடு கைகோர்த்து நடக்கும்போது, தங்களுக்கென்று ஒரு புதிய உலகத்தை உருவாக்கிக்கொள்ளுகிறார்கள். இணைபிரியாத நண்பர்கள் ஒருவரோடொருவர் மகிழும்படி நேரத்தை தாராளமாய் எடுத்துக்கொள்ளுகிறார்கள். கர்த்தர்தாமே நமக்கு ஆத்தும நேசராயும், இணை பிரியாத நண்பருமாயிருக்கிறார். அவருடைய கரம் பிடித்து ஏனோக்கு ஒருநாளோ இரண்டு நாளோ அல்லாமல் முந்நூறு வருடங்கள் நடந்தார். தமிழ் வேதாகமம், ‘சஞ்சரித்துக் கொண்டிருந்தார்’ என்று சொல்லுகிறது. ஆங்கில வேதாகமம் “Enoch Walked with God’’ என்று சொல்லுகிறது.

ஏனோக்கு நடந்த முன்மாதிரியைப் பின்பற்றி நோவா நடந்தார் (ஆதி. 6:9). லேவியைக்குறித்து கர்த்தர் சாட்சி கொடுத்து, “அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்” (மல்.  2:6) என்றார். அந்த முன்மாதிரியைப் பின்பற்றி ஆபிரகாமும் தேவனோடு நடந்து கர்த்தருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார் (யாக். 2:23).

மோசேயும்கூட அதே மாதிரியைப் பின்பற்றி கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசினார். கர்த்தர் சொல்லுகிறார், “என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்” (எண். 12:7,8).

நீங்கள் பரிசுத்தமான தேவனோடு நடக்கவேண்டுமென்றால், பாவங்களை உங்களைவிட்டு அகற்றுங்கள். வேதம் சொல்லுகிறது, “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும், உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).

மேலும், கர்த்தரை எப்பொழுதும் முன்னிறுத்தி அவரைக் கனப்படுத்தி துதியுங்கள். “அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங். 16:8) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நொறுங்குண்ட இருதயத்தோடு கர்த்தருக்குச் சமீபமாய் கிட்டிச்சேருங்கள்.

நினைவிற்கு:- “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.