No products in the cart.
நவம்பர் 15 – அந்த நிருபம்!
“எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து” (ஏசா. 37:14).
நிருபம் என்றால் கடிதம் என்று அர்த்தம். தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட ஒருவர் எழுதுவதை கடிதம் என்று சொல்லுகிறோம். ஆனால் ஒரு சபைக்கு அல்லது ஒரு தேசத்திற்கு பொதுவாக எழுதப்படுமாயின் அதை நிருபம் என்று அழைக்கிறோம். நிருபம் எல்லாருக்கும் தெரியவேண்டிய ஒரு செய்தி. ஆனால் கடிதமோ, தனிப்பட்ட முறையிலே ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியாகும்.
நம்முடைய வாழ்க்கையில் சில கடிதங்களை வாசிக்கும்போது, மனமகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாகிறது. உள்ளத்தை திடன்பெறச்செய்கிறது. ஆனால் சில கடிதங்களோ, அவதூறாய் எழுதப்பட்டு நம்மை பயமுறுத்தி கலங்கும்படி செய்கிறது. சில கடிதங்கள் யார் எழுதினார்கள் என்றே தெரியாமல் வருகிற அநாமதேயக் கடிதங்களாய் இருக்கின்றன. பெரும்பாலான கடிதங்கள் நம்முடைய பதிலை ஆவலோடு எதிர்பார்த்து எழுதப்படுகின்றன.
நான் கர்த்தருடைய ஊழியக்காரனாக, உன்னதமானவருடைய பணியைச் செய்கிறபடியினால், ஆலோசனை கேட்டு வருகிற கடிதங்கள் நிறைய உண்டு. முடிந்தவரையிலும் ஜெபித்து கர்த்தருடைய ஆலோசனைகளை வழங்கி பதில் எழுதுவதுண்டு. ஆனால் சில கடிதங்களோ, பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் சுமந்துகொண்டு வந்து மன அமைதியையும், சமாதானத்தையும் குலைத்துவிடுகின்றன.
உங்களுக்கும் பலவிதமான கடிதங்கள் வரக்கூடும். பல நபர்களிடமிருந்து பயமுறுத்தல்கள் வரக்கூடும். எசேக்கியா தனக்கு வந்த நிருபத்தை ஆலயத்தில் விரித்துவைத்து, “கர்த்தாவே உமது செவியை சாய்த்து கேளும். கர்த்தாவே உமது கண்களைத் திறந்து பாரும். நீரே இதற்கு பதில் அளிக்கவேண்டும்” என்று கதறினார் அல்லவா? அப்படியே நீங்களும் கர்த்தருடைய பாதத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றி, சர்வ வல்லவருக்குத் தெரியப்படுத்திவிடுங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று பலிபீடத்திலே விழுந்துகிடந்து கர்த்தருக்கு முன்பாக விரித்து வைத்து மன்றாடுங்கள்.
சில கடிதங்களை பிசாசின் கடிதங்கள் என்றே அழைக்கலாம். இரவும் பகலும் தேவஜனங்களை குற்றம் சாட்டுகிற சாத்தான் பாதாளத்திலிருந்து தன்னுடைய எண்ணங்களை மனுஷருக்குக் கொடுத்து அவர்கள் மூலமாய் எழுதச்செய்கிற கடிதங்கள். சிலர் தனிப்பட்ட கடிதங்களாய் எழுதாமல் பத்திரிகைகளிலே நிருபங்களாய் எழுதி, கர்த்தருடைய பிள்ளைகள்மேல் குறைகளையும் குற்றங்களையும் உலகம் முழுவதற்கும் பறைசாற்றுகிறார்கள். இதினால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது. தேவனுடைய ஊழியம் தடைபடுகிறது.
தேவபிள்ளைகளே, கடிதம் எழுதும்போது கவனமாயிருங்கள். உங்களுடைய கடிதங்களிலும், எழுத்துக்களிலும் கல்வாரி அன்பு இருக்கட்டும். கிறிஸ்துவினுடைய அன்பை எழுதுங்கள். மனதுருக்கத்தை எழுதுங்கள். அது புண்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலையும் சமாதானத்தையும் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும். கர்த்தருடைய வருகைக்காக ஜனத்தை ஆயத்தம்பண்ணும் பொறுப்பை கர்த்தர் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் அல்லவா?
நினைவிற்கு:- “எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே” (2 கொரி.3:2).