Appam, Appam - Tamil

நவம்பர் 12 – அன்னாளின் பாட்டு!

“என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; ….  உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன் (1 சாமு. 2:1).

அன்னாளின் பாட்டும் வேதத்தில் இடம் பெற்றிருக்கிறது. மலடியாயிருந்து தாங்கமுடியாத நிந்தைகளையும் அவமானங்களையும் சகித்த அவள் ஒருநாள் கர்த்தருடைய பாதத்தில் வந்து தன்னுடைய உள்ளத்தை ஊற்றி ஜெபிக்கத் தீர்மானித்தாள். அதன் விளைவாகவே தீர்க்கதரிசியாகிய சாமுவேல் பிறந்தார்.

அந்த நன்றியுள்ள அன்னாளின் இருதயத்திலிருந்து ஒரு அருமையான பாடல் எழும்பினது. இது ஒரு தீர்க்கதரிசன பாடலும்கூட. இந்தப் பாடல் 1 சாமு. 2:1-10ல் காணும் வேதபகுதியில் அடங்கியிருக்கிறது.

அன்னாள் என்ற வார்த்தைக்கு ‘கிருபை’ என்று பெயர். வேதத்திலே இரண்டு அன்னாள்களைக்குறித்து வாசிக்கிறோம். இரண்டுபேருமே கிருபைபெற்றவர்கள்தான். முதல் அன்னாள் தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாயார். இவள், எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்த எல்க்கானா என்பவனின் மனைவி. அடுத்த அன்னாள் எருசலேமிலிருந்த வயதுசென்ற ஒரு தீர்க்கதரிசி. இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவள்.

இயேசுவைக் குழந்தையாக தேவாலயத்திற்கு மரியாள் கொண்டுபோனபோது, இந்த அன்னாள் சந்தோஷத்தோடு களிகூர்ந்து அங்கு கூடியிருந்த யாவரிடமும் இயேசுவைப்பற்றிப் பேசினாள் (லூக். 2:36-38).

கர்த்தர் நமக்கு நன்மை செய்யும்போது அமைதியாய் இருந்துவிடாமல் நன்றியுள்ள இருதயத்தோடு அவரைத் துதிக்கவும், ஸ்தோத்திரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். “அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்று தாவீது தன் ஆத்துமாவோடு பேசினார். உங்களுடைய வாழ்க்கையில் துதி ஸ்தோத்திரங்கள் உண்டா? கர்த்தரைப் பாடி துதிக்கக்கூடிய இருதயம் உண்டா?

ஒரு மனிதனுடைய ஜெபத்திலே விண்ணப்பங்களும், வேண்டுதல்களும் இருந்தால் போதாது. நன்றியைத்தெரிவிக்கும் வகையில் நமது உள்ளத்திலும், உதட்டிலும், ஜெபத்திலும் அதிகமான துதியிருக்கவேண்டும். அதிகமான ஸ்தோத்திரங்கள் இருக்கவேண்டும். துதித்து ஸ்தோத்திரிக்கிறவர்களே கர்த்தரிடத்திலிருந்து பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள். அன்னாள் துதித்து தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொண்டதை வேதத்தில் பார்க்கிறோம்.

உலகப்பிரகாரமான மலட்டுத்தன்மையைப் பார்க்கிலும் வேதனையானது ஆவிக்குரிய மலட்டுத்தன்மையாகும். கர்த்தருக்கென்று நீங்கள் எத்தனை ஆத்துமாக்களை பெற்றெடுத்திருக்கிறீர்கள்? அப். பவுல், “கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்” (கலா. 4:19) என்றார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவானவர் மற்றவர்களில் உருவாகும்படி கர்ப்பவேதனையோடு மன்றாடியிருக்கிறீர்களா? அன்னாளின் வயிற்றிலே தீர்க்கதரிசியை தோன்றச்செய்த ஆண்டவர், உங்கள் கர்ப்ப வேதனையின் பலனாக ஜெபவீரர்களை எழுப்புவார், உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்களை எழுப்புவார், தீர்க்கதரிசிகளை எழுப்புவார். கர்த்தர் கொடுக்கப்போகிற ஆயிரமாயிரமான சாமுவேல்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

நினைவிற்கு:- “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (1 சாமு. 2:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.