No products in the cart.
நவம்பர் 11 – மறைந்திருக்கும் சிந்தை
“மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோம. 8:6,7).
மரத்துக்குள் வேர் எப்படி மறைந்திருக்கிறதோ, அப்படியே மனிதனுக்குள் ‘சிந்தை’ மறைந்திருக்கிறது. மறைந்திருக்கிற சிந்தையில்தான், இச்சைகள் கர்ப்பந்தரித்து, பாவங்களைப் பிறப்பிக்கின்றன. பாவம் பூரணமாகும்போது ஆத்துமாவிலே அது மரணத்தைப் பிறப்பிக்கிறது. சிந்தையிலே ஜெயமெடுத்தால்தான் உலகம், மாமிசம் மற்றும் பிசாசின்மேல் ஜெயமெடுக்க முடியும். எண்ணங்களுக்கு காவல் வைத்தால்தான், வாழ்க்கையை சாத்தான் சீரழிக்க முடியாதபடி ஆவிக்குரிய வாழ்க்கையைக் காப்பாற்றமுடியும்.
அநேகர் ஜெபிக்க வரும்போது, “ஐயா, எனக்குள்ளே அசுத்தமான சிந்தனைகள் வருகின்றன. கெட்ட எண்ணங்கள் வருகின்றன. ஆபாச நினைவுகள் வருகின்றன. பல சிந்தைகள், என்னைப் பாவத்தில் விழவைக்கின்றன” என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அப்படியே வாலிபரும்கூட, “தறிகெட்டு ஓடுகிற எண்ணங்களுக்கு அணைபோடுவது எப்படி? நான் பரிசுத்தத்தை பாதுகாக்க உண்மையாய் விரும்புகிறேன். ஆனால் என் சிந்தையில் ஜெயமில்லை” என்றெல்லாம் சொல்லுகிறார்கள். சிந்தையை காத்துக்கொள்ளுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுவது மிகவும் அவசியம்.
அப். பவுல், “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:4,5) என்று எழுதுகிறார்.
அவர் சொல்லுகிற போராயுதங்கள் என்ன? முதலாவது, இயேசுவின் நாமம். இரண்டாவது, இயேசுவின் இரத்தம். மூன்றாவது, ஊக்கமான ஜெபம். நான்காவது, உபவாசம். ஐந்தாவது, ஸ்தோத்திரம். ஆறாவது, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை. எந்த ஒரு தேவ மனிதன் இந்த போராயுதங்களைப் பயன்படுத்துகிறானோ, அவன் பொல்லாத சிந்தைகளிலிருந்து நிச்சயமாய் விடுதலை பெறுவான்.
உங்களிலே எப்பொழுதாகிலும் தீமையான சிந்தை எழும்புமென்றால், ‘ஆவியானவரே’ என்று அழையுங்கள். உடனடியாக உங்களுக்குள்ளிருந்து அந்நியபாஷை பொங்கி வருவதை உணருவீர்கள். அப்பொழுது எல்லாவிதமான பாவ சிந்தனைகளும் அகன்றுபோகும்.
ஆரம்பத்தில் இதை நடைமுறைக்குக் கொண்டுவர சற்று கடினமாயிருக்கும். ஆனால், போகப்போக பாவ சிந்தனை வரும்போது தானாகவே அந்நியபாஷை பொங்கி வந்து, அதை அடக்கிவிடுவதைக் காண்பீர்கள். சத்துரு வெள்ளம்போல வரும்போது ஆவியானவர் உங்களுக்காகக் கொடியேற்றுவார்.
வேதம் சொல்லுகிறது, “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்” (ரோம. 8:26).
தேவபிள்ளைகளே, சிந்தையில் ஜெயம் பெறுவதற்கு இயேசுகிறிஸ்துவின் சிந்தையை உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள். சிந்தைக்குக் காவல் வைப்பதே உங்கள் வாழ்க்கையை சீரானதாக்கும்.
நினைவிற்கு:- “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” (1 கொரி. 2:16).
