No products in the cart.
நவம்பர் 11 – கடைத்தொகை!
“காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (பிர. 12:13).
சாலொமோன் ஞானியைப்போல ஞானவான் யாரும் இருந்ததில்லை. எனக்கு ஞானம் வேண்டும் ஆண்டவரே என்று தன்னைத் தாழ்த்தி கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டபோது, கர்த்தர் சாலொமோனுக்கு விசேஷித்த ஞானத்தைக் கொடுத்தார் (யாக். 1:5). இன்றைக்கு கர்த்தர் நமக்கும் ஞானத்தைத் தருகிறார்.
நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, பிரசங்கி ஆகிய புத்தகங்களை எழுதின சாலொமோன் ஞானி, உலகத்திலுள்ள சகல அறிவையும், ஆவிக்குரிய சகல காரியங்களையும் அலசி ஆராய்ந்துபார்த்துவிட்டு, கடைசியாக காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக என்கிறார். அது என்ன? நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதே.
பயம் என்பதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, மனுஷருக்குப் பயப்படுகிற பயம். அடுத்தது, கர்த்தருக்குப் பயப்படுகிற பயம். மனுஷனுக்குப் பயப்படுகிற பயம் கண்ணியை வருவிக்கும் (நீதி. 29:25). சிலர் மரணத்திற்குப் பயப்படுவார்கள். சிலர் உறவினர்களுக்கு பயப்படுவார்கள். சிலர் பிசாசுகளுக்குப் பயப்படுவார்கள். இந்த பயங்களெல்லாம் ஒரு மனிதனை அடிமைக்குள்ளாக்கி முடிவிலே அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடையச்செய்யும் (வெளி. 21:8).
ஆனால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நம்மை பாவத்திலிருந்து பாதுகாத்து பரிசுத்தத்திலே நிலைநிறுத்தும். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்று வேதம் சொல்லுகிறதல்லவா? (நீதி. 8:13). யோசேப்பு பாவத்திற்கு விலகி ஓடினதின் இரகசியம் என்ன? தேவனுக்குப் பயப்படுகிற பயம் அல்லவா? (ஆதி. 39:9). என்னைக் காண்கிற தேவன் ஒருவர் உண்டு. அவர் என்மேல் அன்பும் பாசமும் நிறைந்தவர். தாழ்விலே என்னை நினைத்தருளினவர். அவரைத் துக்கப்படுத்தி நான் பாவம் செய்யவேமாட்டேன் என்பது யோசேப்பின் தீர்மானமாய் இருந்தது.
யோசேப்பு தேவனுக்குப் பயந்ததினால் அவனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்ன? எகிப்திலே அவர் மிகவும் உயர்த்தப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” (நீதி. 10:27). கர்த்தருக்குப் பயப்படுகிற ஒரு மனுஷன், திடஇருதயமுள்ளவனாயிருப்பான். சிங்கத்தைப்போல தைரியமுள்ளவனாயிருப்பான். அவன் அற்பமான உலக மனுஷர்களைப் பார்த்து பயந்துகொண்டிருக்கமாட்டான்.
தானியேலைப் பாருங்கள். அவர் தேவனுக்குப் பயப்படுகிறவராய் இருந்தார். ஆனால் அவர்மேல் குற்றம் கண்டுபிடிக்கும்படி ஏராளமான பிரதானிகள் முயன்றுகொண்டிருந்தார்கள். ஜெபிக்கக்கூடாது என்ற சட்டத்தை இயற்றினார்கள். ஆனால் தானியேலோ, இராஜாவின் சட்டத்தைக்கண்டு பயப்படவில்லை. சிங்கக்கெபியைப் பார்த்து கலங்கவில்லை. வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.” (நீதி. 14:26,27). தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பயப்படுகிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
நினைவிற்கு:- “பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்” (பிர. 8:12).