No products in the cart.
நவம்பர் 10 – சிறுமைப்பட்டவன்மேல் சிந்தை
“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்” (சங். 41:1).
தாவீது சவுலால் சிறுமைப்படுத்தப்பட்டவராய், வனாந்தரங்களிலும், குகைகளிலும் ஒளிந்து வாழவேண்டிய சூழ்நிலையிருந்தது. அப்போது அநேகர் தாவீதின்மேல் சிந்தையுள்ளவகளாயிருந்து, பலவிதங்களில் உதவினார்கள். அதை தாவீது மறந்துவிடவில்லை. சிறுமைப்பட்டவர்களுக்கு உதவி செய்வதினால் வரும் பாக்கியத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினார். இரக்கமுள்ளவர்கள், இரக்கம் பெறுவார்கள்.
சாலொமோன் ஞானிகூட, “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்றார். பணப்பற்றாக்குறையினால் சிறுமைப்பட்டவர்களுமுண்டு. துன்பத்தின்மேல் துன்பம் வந்து, சிறுமைப்பட்டவர்களுமுண்டு. என்ன விதத்தில் அவர்களை ஆற்றலாம், தேற்றலாம், அவர்களுக்கு உதவியாயிருக்கலாமென்ற சிந்தையோடிருந்தால், நிச்சயமாகவே நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
ஜார்ஜ் முல்லர், சிறுமைப்பட்ட அனாதைக் குழந்தைகள்மேல், இரக்க சிந்தைகொண்டு பல ஆயிரம் குழந்தைகளை வளர்த்து வந்தார். மதர் தெரசா திக்கற்றவர்கள், அனாதைகள், மரிக்கும் நிலையில் கைவிடப்பட்டவர்கள் எல்லோர்மேலும் இரக்க சிந்தைகொண்டு தெய்வீக அன்பைக் காண்பித்தார். “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 25:40). “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்” (ஏசா. 61:1). கிறிஸ்து சிறுமைப்பட்டவர்களுக்கும், தரித்திரருக்கும்கூட சுவிசேஷத்தை அறிவித்தார்.
சிலரை நோய்கள் சிறுமைப்படுத்துகிறது. சிலரை வறுமையும், கடன் பிரச்சனையும் சிறுமைப்படுத்துகிறது. சிலரைக் கொடூரமான தீய மனுஷர்கள் சிறுமைப்படுத்துகிறார்கள். எல்லா சிறுமைகளைப் பார்க்கிலும் பெரிய சிறுமை, சாத்தான் ஜனங்களை பாவத்துக்குள் அடிமைகளாக்கி, சிறுமைப்படுத்தி, நரகத்துக்கு இழுத்துச்செல்லுவதேயாகும். அப்படிப்பட்ட மக்கள்மேல் நீங்கள் சிந்தைகொண்டு கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படி சுவிசேஷகர்களாய் எழும்புவீர்களா? விடுதலை ஊழியத்தில் இறங்கி, பாவப்பழக்க அடிமைத்தனத்திலிருந்து ஆத்துமாக்களை மீட்டெடுப்பீர்களா?
இயேசு ஒரு ஸ்திரீயை ஜெப ஆலயத்தில் சந்தித்தார். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். பதினெட்டு வருஷங்களாய் பெலவீனப்படுத்தும் ஆவி அவளைப் பிடித்திருந்தது. சிறுமைப்பட்ட அவள்மேல் கர்த்தர் சிந்தைகொண்டார். “ஸ்திரீயே, உன் பெலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய்” என்று சொல்லி, அவள்மீது தன் கையை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள். “இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா” (லூக். 13:16) என்று கர்த்தர் கேட்டார்.
சிறுமைப்பட்டவர்கள்மேல் சிந்தையுள்ளவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் எவை? முதலாவது, தீங்குநாளில் கர்த்தர் அவர்களை விடுவிப்பார். இரண்டாவது, கர்த்தர் அவர்களைப் பாதுகாத்து உயிரோடேவைப்பார். மூன்றாவது, பூமியிலே அவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள். நான்காவது, சத்துருக்களினிடத்துக்கு ஒருநாளும் கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடுக்கமாட்டார்.
நினைவிற்கு:- “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவா. 3:8).