No products in the cart.
நவம்பர் 10 – உற்பத்தி ஸ்தானம்!
“பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்கும் காண்பித்தான்” (வெளி. 22:1).
ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு உற்பத்தி ஸ்தானம் உண்டு. நதியானது குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பமாகி, அநேக சிறு சிறு நீரோடைகளைத் தன்னில் சேர்த்துக்கொண்டு பெரிய நதியாக பாய்ந்து வருகிறது. ஒரு நதியைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அந்த நதி எங்கே இருந்து ஆரம்பமாகிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பார்கள்.
உலகத்திலுள்ள நதிகளுக்கும், ஏதேன் தோட்டத்திலிருந்த நதிகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. உலகத்திலுள்ள நதியிலே பல ஆறுகள் வந்து சங்கமமாகி அது மிகப் பெரிய நதியாக மாறி ஓடும். ஆனால் ஏதேனிலிருந்த நதி அப்படியல்ல. பெரிய நதியிலிருந்து நான்கு ஆறுகள் பிரிந்து புறப்பட்டு, நான்கு வெவ்வேறு தேசங்களில் பாய்ந்தன. ஏதேனிலிருந்த நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது ஆதியாகமம் புத்தகத்திலே தெரிவிக்கப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி நதி பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. இந்தியாவிலுள்ள சிந்து, கங்கை, பிரமப்புத்திரா நதிகள் எல்லாம் இமய மலையிலுள்ள மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகிறது. பொதுவாக நதி என்பது மலையுச்சியில் உற்பத்தியாகி, தாழ்வான பகுதியை நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமமாகிறது.
கனடா மற்றும் அமெரிக்க தேசங்களுக்கிடையே பிரசித்திபெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இரவும் பகலும் அங்கே தண்ணீர் கொட்டிக்கொண்டேயிருக்கும். குளிர்காலத்தில் பெரிய பெரிய பனிக்கட்டி பாளங்கள் வந்து விழும். மிக அகலமான நீர்வீழ்ச்சி அது. அதன் நதிகள் ஐந்து குளங்கள் இருக்கும் ஒரு பகுதியிலிருந்துதான் புறப்பட்டு வருகின்றன. அங்கே இருப்பவை மிகப் பெரிய பிரமாண்டமான குளங்கள். அங்கே ஒருநாளும் தண்ணீர் வற்றுவதே இல்லை. அந்த ஐந்து குளங்கள்தான் கனடாவையும், அமெரிக்காவையும் செழிப்பாக்குகிற நயாகரா நீர்வீழ்ச்சியைக் கொண்டுவருகின்றன.
இயேசுகிறிஸ்துவுக்கு இருந்ததும் ஐந்து காயங்கள் அல்லவா? அந்த ஐந்து காயங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய ஜீவ நீரூற்று புறப்பட்டு வருகிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய அவரிடத்திலிருந்து பாய்ந்து வருகிற அந்த ஜீவ நீரூற்று வற்றுவதே இல்லை. அந்த ஆறு தாகத்தைத் தீர்க்கிறது. ஜீவத்தண்ணீரைக் கொண்டுவருகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையைச் செழிப்பாக்குகிறது.
இந்த ஆற்றின் உற்பத்தி ஸ்தானம் எது? வேதத்தின் கடைசி அதிகாரமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தின் 22-ம் அதிகாரம் முதலாம் வசனத்தில் அந்த பெரிய இரகசியத்தை கர்த்தர் தம் அன்பின் சீஷனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினார். ஆம், ஆட்டுக்குட்டியானவர் இருக்கிற சிங்காசனத்திலிருந்துதான் அந்த நதி புறப்பட்டு வருகிறது.
தேவபிள்ளைகளே, பரலோக சீயோன் மலையிலுள்ள ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிற அந்த நதி இன்று உங்களுடைய உள்ளத்திற்குள் வருகிறது. உங்களுடைய பாவங்களைக் கழுவும்படியாக, உங்களை சுத்திகரித்து தூய்மையாக்கும்படியாக இறங்கி வருகிறது. அந்த நதி உங்களுடைய வாழ்க்கையைச் செழிப்பாக்கும்.
நினைவிற்கு :- “கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்” (சங். 78:16).