No products in the cart.
நவம்பர் 09 – மனச்சாட்சியின் சிந்தை
“அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்” (ரோம. 2:15).
ஒரு மனிதனானவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனானாலும், கர்த்தர் அவனுக்குள் மனச்சாட்சியை வைத்திருக்கிறார். அது தேவனுடைய குரலாகும். இந்த மனச்சாட்சி ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையையும், செயலையும்கூட நியாயந்தீர்த்துக்கொண்டேயிருக்கிறது. குற்றம் செய்யும்போது அவன் மனச்சாட்சியால் குத்தப்படுகிறான். அவனையும் அறியாமல் அவனுக்குள் ஒரு தயக்கம் ஏற்படத்தான் செய்கிறது.
கிறிஸ்துவை அறிந்தவர்கள் வேதத்தின்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஆனால் கிறிஸ்துவை கொஞ்சங்கூட அறியாதவர்கள் மனச்சாட்சியின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள். வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்க்கையில் செய்த நன்மைதீமைகள் அனைத்தும் ஒரு புத்தகம்போல திறக்கப்படும். மனச்சாட்சி ஒருவனை குற்றவாளி அல்லது குற்றமற்றவன் என்று தீர்ப்பு சொல்லும்.
ஆப்பிரிக்கா தேசத்திற்கு சென்ற ஒரு ஊழியர், அங்கே ‘மனச்சாட்சி’ என்ற ஒரு வார்த்தை அவர்கள் மொழியிலேயே இல்லை என்பதைக் கவனித்தார். ஆனால் மக்கள் அதைக்குறித்து பேசும்போது, ‘மூன்று முனைகளையுடைய முக்கோணக் கத்தி’ என்று சொன்னார்கள். அவர்களுடைய வியாக்கியானத்தின்படி, ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவனுடைய இருதயத்திலே முக்கோண வடிவமான ஒரு கூரிய கத்தி சுழல ஆரம்பிக்கிறது. பெரிய பாவம் செய்தால் அந்த முக்கோண கத்தி வேகமாய் சுழன்று இருதயத்தைக் குத்திக் கிழிக்கும். ஆனாலும் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருந்தால் அந்த முக்கோணக் கத்தியின் கூர் முனை மழுங்கிவிடுகிறது. இப்படித்தான் அநேகர் மனச்சாட்சியை மழுக்கிக்கொண்டு வாழுகிறார்கள் என்பதே அம்மக்களின் வியாக்கியானமாயிருந்தது.
ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவனுடைய மனச்சாட்சி ஓலமிடுகிறது. நீ பாவம் செய்து உன் ஆத்துமாவைக் கெடுத்துக்கொள்ளாதே என்று எச்சரிக்கிறது. பேதுரு கர்த்தரைச் சபித்து சத்தியம்பண்ணியபோது, கூரிய கத்தி அவர் உள்ளத்தைக் கிழித்தது. யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்தபோது, அந்த முக்கோணக் கத்தி சுழன்று அவனது இருதயத்தை வாதித்தது.
ஒருவன் தன் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது, பாவஅறிக்கைசெய்து, கர்த்தரண்டை வரும்போது, இரட்சிப்பு ஏற்படுகிறது. ஆனால் மனச்சாட்சியை மழுக்கிக்கொள்ளும்போது, இருதயம் கடினமடைகிறது. அப். பவுல் வசனத்தைப் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டவர்கள் உள்ளத்தில் குத்துண்டார்கள். ‘ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கதறினார்கள். அது இரட்சிப்புக்கு அனுகூலமாய் முடிந்தது.
ஒரு மனிதனுடைய மனச்சாட்சியை சுத்திகரிப்பது இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தமாகும். பாவங்களை அறிக்கையிடாதவரையிலும் அவனுக்கு நிம்மதியும், சமாதானமுமிருப்பதில்லை. அதே நேரம் “கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபி. 9:14).
நினைவிற்கு:- “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).
